Friday, 11 October 2013

மனித மனம் ஓர் அற்புதம்


மனித மனம் ஓர் அற்புதம் .ஆனால் உலகின் அத்தனை அவலங்களும் மனித மனத்தில்தான் உற்பத்தியாகின்றன.அது மனத்தின் பிழையா என்றால் – இல்லை. மனம் எனும் கருவியை எப்படிக் கையாளுவது என்று தெரியாததால் வந்த வினை. ஓட்டிச் செல்லத் தெரிந்தால் கார் ஓர் அற்புதம். ஆனால் தெரியாமல் ஓட்டினால் அதுவே அபாயம் அல்லவா ? மனமும் அப்படித்தான். மனதின் இயல்பே கூட்டலும் பெருக்கலும்தான். கழித்தல் கணக்கே அதற்குத் தெரியாது. மனதின் இயல்பறிந்து பயன்படுத்தும் போது அதுவே ஆனந்தத்தின் ஊற்றுக்கண் ஆகிறது.

  மனம் என்பது எண்ணங்களை ஊடும் பாவுமாக கொண்டு பின்னப்பட்டுள்ளது. எண்ணம் எழுந்தவுடன் அதை வெளிப்படுத்த சொல்லை உபயோகப் படுத்துகிறோம். பிறகு அந்த எண்ணமே செயலாக வடிவம் பெறுகிறது. எண்ணத்திற்குப் பிறகு நிகழும் சொல் – செயல் ஆகிய இரண்டும் எண்ணத்தை மையமாக கொண்டே அமைகிறது. எண்ணம் – சொல் - செயல்  ஆகிய மூன்றும் உயர்வானதாகவும் ஒன்றுக்கொன்று இசைவானதாகவும் நன்மை பயப்பவையாகவும் இருத்தல் வேண்டும். இதையே பகவான் திரிகரண சுத்தி என்று குறிப்பிடுவார்.

 இந்திய மனதின் முக்கிய ஆளுமை உண்மையிலேயே ஆன்மிகம் தான். முடிவற்ற நிலை பற்றிய உணர்வுதான் அதன் பிறப்பிடம் என அரவிந்தர் கூறுகிறார். மனமே மனிதனுக்கு நண்பனுமாவான் – பகைவனும் ஆவான் என கீதை பேசுகிறது. மனம் விபரீதமாக இருந்தால் விபரீதமான வாழ்க்கை அமையும். மனம் எதிர்மறையாக இருந்தால் எதிர்மறையான வாழ்க்கை தொடரும். மனம் நேர்மறையாக இருந்தால் நேர்மையான வாழ்க்கை அமையும். அற்புதமான மனம் இருந்தால் அற்புதமான வாழ்க்கை அமையும். மனம் சோர்வுறும் போது அது உங்களுக்குள் இருந்து கொண்டே கீறிக் கிழித்து உங்களை உபயோகமில்லாமல் அழித்து விடும் .உரு விஷ ஆயுதமாகி விடும்.

  மனம் என்பது ஆத்ம சொரூபத்திலுள்ள ஒரு  அதிசய சக்தி. சகல நினைவுகளையும் தோற்றுவிக்கிறது. நினைவுகளை நீக்கிப் பார்க்கின்ற போது தனியாக மனம் என்றோர் பொருள் இல்லை. ஆகவே நினைவே மனத்தின் சொரூபம் என்கிறார் ரமண மகரிஷி.

  சரீரத்தைத் தேராகவும் மனதைக் கடிவாளமாகவும் – புத்தியைச் சாரதியாகவும் – ஜீவனைத் தேரில் வீற்றிருப்பவனாகவும் அறிதல் வேண்டும் என கடோபநிஷத் உரைக்கிறது. அடக்கப் படாத மனதுடனும் விவேகமில்லாத புத்தியுடனும் கூடியவன் எவனோ அவனுக்குச் சாரதிக்கு அடங்காத துஷ்டக் குதிரைகள் இந்திரியங்கள் வசப்பட மாட்டா . எண்ணங்களின் தொகுதியே மனம்.

 மனத்தின் கருவி சிந்தனை. சிந்தனையின் முடிவு அறிவு. சிந்தனைக்குக் கருவி எண்ணம். நினைவு – சிந்தனை – அறிவு – கற்பனை – முடிவு – பாகுபாடு – ஆராய்ச்சி போன்றவை மனத்தின் திறன்கள் புறம் அகமானால் ஆன்மா ஜடத்தை ஆளும் என்கிறார் பகவான் கிருஷ்ணர்.. உடலாலும் உணர்வாலும் பாதிக்கப் படாத – காய்தல் உவத்தல் இல்லாத மனம் தெளிவுக்குரியது. தெளிவுக்குரிய மனம் உயர்வுக்குடையது தானே.!

No comments:

Post a Comment