Monday, 14 October 2013

பத்திரிகையாளர் பாரதியார்


மகா கவி பாரதியாரின் வாழ்க்கை ஒரு சரித்திரம் அல்ல – சகாப்தம். மகா கவி ஒரு யுக புருஷர். ஓராயிரம் வருடம் ஓய்ந்தே கிடந்த பின்னர் வாராது போல் வந்த மாமணி. சொல்லெடுத்து சூக்குமத்தில் விட்டெறிந்து சுட்ட பழம் உதிர்த்த சொல் வேந்தர் அவர். சொல் உராய்ந்து எழுந்த தீயில் கனிந்த நாவுடையார். “ பாரதி “ யில் இல்லாதொன்றில்லை. தமிழ் இலக்கியப் பேரகராதி –“ என்சைக்ளோபீடியா “ எனில் அது உண்மை வெறும் புகழ்ச்சியன்று. கேட்டதைத் தரும் கற்பகத் தரு. வேண்டியதை வழங்கும் காமதேனு. அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம். ஞான ஊற்று. தொட்டனைத்தூறும் மணற் கேணி. எனது ஊனாய் – உடலாய் – உணர்வாய் – உயிராய்ப் பிண்ணிப் பிணைந்து இரண்டறக் கலந்த –  என் இதயாசனத்தில் கோயில் கொண்டிருக்கும் எனதாசானின் பன்முகப் பரிணாமத்தில் – பரிமாணத்தில் -  பத்திரிகையாளராய் இவ்வுலகிற்குக் காட்டுங்கள் எனப் பணித்திருக்கிறார் எனதருமைச் செந்தமிழ்ச் செம்மல் – சொல்லின் செல்வர் – முனைவர் பேராசிரியர் இரத்தின வேங்கடேசனார் புதுவை மண்ணின் மைந்தர்.
   
சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் ஒன்றிணைந்து ஆண்டுதோறும் மகா கவிக்கு விழா எடுப்பதை விரதமாக – ஏன் வேள்வியாகவே கொண்டு தளராது தொய்வின்றிக் கொண்டாடி வரும் நிலையில் மூன்றாம் ஆண்டு முத்தாய்ப்பு  நிகழ்வாக – மகா கவியைப் பல்வேறு கோணங்களில் படைத்திட அறிஞர் பெருமக்களின் கட்டுரைக் கனியமுதை மகா கவிக்கு மகுடமாய்ச் சூட்டி ஆவணப்படுத்திடும் முயற்சி எல்லா வகையிலும் வெற்றி பெற எனது நெஞ்சார்ந்த வாழ்த்தினைக் காணிக்கையாக்கி -  மகா கவியின் ஒளிஉமிழ் விழிதனில் வெளி வரும் சுடர்தனை வணங்கி எனது கட்டுரையைச் சமர்ப்பிக்கிறேன். இதழியல் துறையில் பணியாற்றுவது ஒரு தவம். அரைநூற்றாண்டுக்கு மேலாக இத்துறையில் பணியாற்றி யான் கற்ற பாடம் – பெற்ற பயன் இது.
    மகாகவி பாரதியாரின் பத்திரிகைப் பயணம் “ சுதேசமித்திரன் “ இதழிலிருந்து துவங்குவதாகவே தெரிகிறது. அந்தக் கால கட்டத்தில் பல இதழ்கள் வெளிவந்த போதும் அரசியல் விழிப்புணர்வு தோன்றிப் பரவப் பாடுபடத் தோன்றிய முதல் இதழ் எனும் வரலாற்றுப் பெருமையை சுதேசமித்திரனே பெறும்.1882 இல்வாரப் பதிப்பாகத் தோன்றிய சுதேசமித்திரன் 1888 இல் வாரம் இருமுறையும் 1899 ஆகஸ்ட்டில் நாளிதழாகவும் வெளிவந்தது. சமயம் – இலக்கியம் தொடர்பாகத் தமிழை வலிவும் பொலிவும் மிளிரப் பயன்படுத்திய தமிழ் இதழ்கள் இருந்தபோதிலும் அரசியல் செய்திகளைத் தமிழில் தருவதற்குரிய முயற்சி தமிழ் இதழியல் துறையில் சுதேசமித்திரன்தான் எடுக்க வேண்டியிருந்தது. சுதேசமித்திரனைத் துவக்கிய ஜி.சுப்பிரமணிய அய்யரின் பணி போற்றுதலுக்குரியதாகும். கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி . அவர்கள் சுதேசமித்திரனை
தமிழ் மைந்தர் தூக்கத்தால் தாழ்வுற்றுச் சாவின்

அமிழ்கின்ற தன்மைகண் டன்னார்க் – கமிழ்தென்னச்
செந்தமிழ்  நம்முயர் சுதேசமித்திரன்
தொடங்கி
நந்தமிழை யெழுப்பி நன்கு.

      எனப் போற்றுகின்றார். பத்திரிகையுலகின் தந்தை சுதேசமித்திரன் எனத் தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்களால் புகழப்படும் இவ்விதழில் 1904 நவம்பரில் துணையாசிரியராகப் பாரதியார் பொறுப்பேற்றார். இந்த ஆண்டில் திருநெல்வேலியிலிருந்து “ சர்வஜன மித்திரன் “ – திருச்சியிலிருந்து “ திருச்சி நேசன் “ – திராவிடபோதினி – பிரஜாநுகூலன் – லோக வர்த்தமானி – சுபோத பாரிஜாதம் – அமிர்தவசனி- சேலத்திலிருந்து “தட்சிண தீபம் “ திராவிடபிமானி – சென்னையிலிருந்து “சுதேசி” இதழ்கள் வெளிவந்தன .இவற்றுள் சர்வஜன மித்திரன் ஆசிரியர் குருமலை சுந்தரம் பிள்ளையும் சுதேசி ஆசிரியர் சங்கரலிங்கம் பிள்ளையும் சுதேசமித்திரனில் துணையாசிரியர்களாகச் சேர்ந்தனர். 1902 செப்டம்பர் 1 –லிருந்து விவேக பாநு எனும் முதல் தரமான தேசிய தமிழ் இலக்கியத் திங்கள் இதழ் மதுரையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்தது. இந்த இதழில் 1904 ஆம் ஆண்டு ஜீலையில் பாரதியின் ‘ தனிமையிரக்கம் ‘ எனும் செந்தமிழ் மரபுக் கவிதை வெளிவந்தது. எட்டயபுரம் ஸி.சுப்பிரமணிய பாரதி எனும் பெயரில் இது வெளியாயிற்று. பாரதியின் பத்திரிகை தொடர்பான முதல் செய்தி இது. சுதேசமித்திரனில் பொறுப்பேற்பதற்கு முன் திருநெல்வேலி சர்வஜன மித்திரனில் எட்டயபுரம் மன்னரை விமர்சனம் செய்ததாகவும் அதனால் மன்னரின் கோபத்திற்கு ஆளானதாகவும் அவரது சகோதரர் குறிப்பிடுகிறார். ஜி.சுப்பிரமணியர் ஆங்கிலத்தில் நடத்திய Madras Standard “ எனும் பத்திரிகையிலும் பாரதியார் எழுதியிருப்பதாக அவர் தெரிவிக்கிறார் .சுதேசமித்திரனில் துணையாசிரியராகப் பணியாற்றிக் கொண்டே “சக்ரவர்த்தினி” யில் ஆசிரியராகவும் அமர்ந்த பெருமை பாரதியாருக்கு முதன்முறையாக வாய்த்தது. இதன் மூலம் ‘ பெண் விடுதலைக்காக தர்மயுத்தம்’ நடத்த வேண்டும் எனும் போர்க் குரலோடு கவிதைகளையும் கட்டுரைகளையும் படைக்கலன்களாக வடித்துக் கொடுத்த மகா கவியை விஞ்சும் அளவிற்கு வேறு கவிஞர்களை இந்திய விடுதலை இயக்கம் தந்து விடவில்லை. அந்த அளவிற்குத் தன்னேரில்லாப் பெண்ணுரிமை இயக்கப் பெரும் பாணனாகப் பொலிவுறுகிறார் பாரதியார். “ A Tamil monthly devoted  mainly to the Elevation of  Indian Ladies என்று ஆங்கிலத்திலும் மாதர்களின் அபிவிருத்தியே நோக்கமாக வெளியிடப்படும் மாதாந்திரப் பத்திரிகை எனத் தமிழிலும் அறிவிப்புகளை அமைத்துக் கொண்ட ‘ சக்ரவர்த்தினி ‘யின் முதல் ஆசிரியர் பாரதியார். பெண்கள் முன்னேற்றத்திற்காக சக்ரவர்த்தினிக்கு முன்பு 1905 –க்கு முன்பே 1883- இல் சுகுண போதினி எனும் மாதமிரு முறை இதழ் சென்னையிலிருந்து திரு பாலசுந்தரத்தை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது. 1887 ஜீன் முதல் வி.கிருஷ்ணமாச்சாரியாரை ஆசிரியராகக் கொண்டு “ மகாராணி “ எனும் இதழும் வெளி வந்தது. 1905 ஏப்ரல் 13 –இல் “ தமிழ் மாது “ எனும் இதழ் கோ.ஸ்வப்பநேஸ்வரியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது. சமூக சீர்திருத்தத்தை – அதிலும் விதவை மறுமணம் முதலானவற்றை அக்காலத்தில் மிக்கத் துணிச்சலுடன் தமிழ் மாது எழுதியது. சக்ரவர்த்தினி முதல் இதழ் 1905 ஆகஸ்ட்டில் வெளிவந்தது. தலையங்கத்தின் மேற்புறம் கீழ்க் கண்ட குறட்பா அச்சிடப்பட்டிருந்தது.
பெண்மை யறிவுயரப் பீடோங்கும் பெண்மைதா
னொன்மை யுறவோங்கு முலகு.       

அக்கால கட்டத்தில் இது புதுமையும் புரட்சியுமாகும். இதனைப் பின்னர் பல பத்திரிகையாளர் பின்பற்றினர். பிரபல எழுத்தாளர் கல்கி இரா.கிருஷ்ணமூர்த்தி தமது கல்கியில்  ‘ தமிழ்த் திருநாடு தன்னைப் பெற்ற.....தாயென்று கும்பிடடி பாப்பா “ எனப் பிரசுரித்தார். பாரதியை அடியொற்றி 1965 இல் எனது அச்சகத்தில் அச்சாகி எம்மை நிர்வாக ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த “ காந்திவழி “ வார இதழில் இதே போல ‘...இதனால் படைஞர்தம் செருக்கொழிந்து அறம் திறம்பாத ஆட்சி....”என வெளியிட்டிருந்தேன். பெண்களுக்கு என இதழ்கள் இருக்கும் போது சக்ரவர்த்தினி ஏன் எனச் சிலர் வினவியிருப்பார்கள் போல் உள்ளது. அதற்கு அவர் அளித்துள்ள பதில் வருமாறு :: இப்புதுப் பத்திரிகை ஏன் எனச் சிலர் கேட்பர். ஸகாரா  பாலை வனத்தில் இப்பொழுது சிற்சில நீர்ச் சுனைகள் இருக்கின்றன. அதுபற்றி அப்பாலைக் காட்டில் இனி நீர்ச்சுனை தோண்டவே கூடாதென யார் சொல்லத் துணிவர். அஞ்ஞானப் பாலை வனத்தில் அறிவு நீர் காணாது வருந்தியலையும் நமது மாதர்களுக்குப் பெரிய ஏரி நீர் அளிக்க எம்மால் முடியாதெனினும் நாம் தோண்டுகின்ற சிறு சுனை அனாவசியமென்று யார் சொல்லத் துணிவார்கள்? .அறிவின்மை எனும் பெருங்கடலில் தத்தளிக்கும் நமது பதினாயிரக் கணக்கான பெண்களைக் கரை சேர்ப்பதற்குச் சில பெருங்கப்பல்களிருந்த போதும் யாம் கொண்டு வரும் சிற்றோடம் அவசியமில்லையென்று யாவரே கூறுவர் ? பெண்கள் முன்னேற்றத்திற்குரிய கடமையைச் செய்யத் தவறுபவர்கள் தேச விரோதிகள் என்றும் தேசாபிமானிகள் துணை நிற்க வேண்டுமென்றும் கூறிக் கட்டுரையை முடிக்கிறார்.
1906 மே 9 இல் தொடங்கிய ‘ இந்தியாவில்” முழுக் கவனத்தையும் செலுத்த பாரதி சக்ரவர்த்தினியிலிருந்து விடை பெறுகிறார். பத்திரிகைத் துறையில்  பாரதியின் ‘ விசுவ ரூப ஆளுமையை ‘ இந்தியாவில் காணலாம் .தமக்கே உரிய துணிவு – கணிவு – பணிவு நனி சிறக்க “ இந்தியா “ வில் கோலோச்சுகிறார் பாரதியார். இந்தியா இதழ் தோன்றக் காரணமாக இருந்தவர்களுள் மண்டயம் சகோதரர்களைக் குறிப்பிடாமலிருக்க முடியாது. இவர்கள் விஜயா – பாலபாரத் – பால பாரதா முதலான இதழ்களைத் தொடங்கி சிற்சில சமயங்களில் ஆசிரியர்களாகவும் இருந்திருக்கிறார்கள். மண்டயம் குடும்பத்தின் மூத்த தலைவர் எஸ்.கிருஷ்ணமாச்சாரியார் புதுச்சேரியில் “ யூனியன் ரிபப்ளிக் “ எனும் தேசியப் பத்திரிகையை ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் வெளியிட்டார். இந்தியா இதழை ‘ சென்னையில் புதிய கட்சிக்கு ( தீவிரவாத தேசிய அணி ) ஒரே பிரதிநிதியாய் இருக்கும் நமது தமிழ்ப் பத்திரிகை என பாரதி குறிப்பிடுகிறார். இந்தியா தேசிய அரசியலில் திலகர்வழி நின்ற தேசியவாதத்தை ஆதரித்தது. சென்னையில் மே 9 – 1906 இல் முதல் இதழ் வெளி வந்தது .கடைசி இதழ் 1908 செப்டம்பர் 5 இல் வெளி வந்தது. புதுவையில் முதல் இதழ் 1908 அக்டோபர் 10 லும்  கடைசி இதழ் 1910 மார்ச் 12 லும் வெளிவந்தன. சென்னையிலும் புதுச்சேரியிலுமாகப் பாரதியார் 3 ஆண்டுகள் 10 மாதங்கள் பணியாற்றியிருக்கிறார் .இந்தியாவின் ஆசிரியராக இருந்து கொண்டே ஆங்கில வார இதழான பால பாரத் ஆசிரயராகவும் அது நின்ற பிறகு பால பாரதா ஆங்கில இதழ் ஆசிரியராகவும் பாரதியார் பணியாற்றியிருக்கிறார். அச்சிட்டு முடிந்த பிறகு வந்த செய்திகளைத் தனி அநுபந்தமாக வெளியிட்டுப் புதுமை படைத்தது புதுவை இந்தியா. பிரஞ்சுப் புரட்சியின் முப்பெரும் முழக்கங்களான ‘ ஸ்வதந்திரம் – ஸகோதரத்துவம் – ஸமத்துவம் ‘ என்பவைகளை முதல் பக்கத்தில் முகப்பு மகுடமாக இந்தியா அமைத்துக் கொண்டது. இந்தியாவைப் போலவே இதன் சகோதரப் பத்திரிகைகளான தர்மம் – சூர்யோதயம் – ஆகியவையும் மேற்கூறப்பட்ட முழக்கங்களை முகப்பில் அச்சிட்டன .நிருபர்கள் அல்லாத வாசகர்கள் அனுப்பும் செய்திகளுக்கும் பணம் தந்து முன்மாதியைத் தோற்றுவித்தது இந்தியா.

பாரதியாரின் சமகால இதழ்கள்

சென்னை – கேசரி – மதுரை – விவேக பாநு – கொழும்பு – இந்துநேசன் – காரைக்கால் –நியாயாபிமானி – கும்பகோணம் – யதார்ததவசனி – விஜயவிகடன் – திருச்சி – பிரஜானுகூலன் – வாணியம்பாடி – விவேகானந்தம் – புதுச்சேரியிலிருந்து தர்மம் – சூர்யோதயம் – விஜயா – கலைமகள் மற்றும் வாணி விலாசினி தமிழகம் கிராம பரிபாலினி – ரங்கூன் – சுதேச பரிபாலினி – சந்திரோதயம் – விஸ்வ வித்யா விநோதினி – லாயர் – ஸ்வதேசபாநு – அக்னி குலாதித்தன் முதலானவை.
  சென்னையில் தேசிய இயக்கத்தைக் கண்டிப்பதில் முன்நின்ற பத்திரிகை “ மெட்ராஸ் டைம்ஸ் “ .இந்தியா ஆயுத பலத்தாலும் தோள் வலியாலும் மாத்திரமே பிரிட்டீஷாரால் ஆளப்பட்டு வருகிறது எனும் கருத்தை டைம்ஸ் எழுத அதை வைத்து தேச பக்தி எழுச்சியூட்டும் அற்புதமான கட்டுரையை ‘ கலப்பற்ற உண்மை ‘ எனும் தலைப்பில் ஆகஸ்ட் 25 – 1906 இல் கட்டுரையாக்கி விட்டார் பாரதியார். சுதேசியப் பிரச்சாரத்தை எதிர்த்த கல்கத்தா “ ஸ்டேட்ஸ்மேன் “ இதழை ( 1875 இல் ராபர்ட் நைட் எனும் ஆங்கிலேயரால் நிறுவப்பட்டது ) வஞ்சக் கிழவிப் பத்திரிகை – கூனிப் பத்திரிகை என்று சாடினார் .இந்திய விடுதலைப் போருக்கு ஆதரவு காட்டும் அயல் நாட்டு இதழ்களின் கருத்துக்களை ‘இந்தியா’ வாசகர்கள் அறிய நல்வாய்ப்பைப் பாரதியார் அளித்து வந்தார். தமது முத்திரைச் சொற்களால் கண்டிக்கிற அதே வேளையில் உண்மையான ஆசிரியர் என்கிற வகையில் பத்திரிகையாசிரியர் காட்ட வேண்டிய அரசியல் வேற்றுமைக்கு அப்பால் மனிதாபிமானத்தை பாரதியார் காட்டியது குறிப்பிட வேண்டிய ஒன்றாகும். மதிப்பிற்குரிய சகோதரப் பத்திரிகையானாலும் குறை கண்டவிடத்து சமரசம் காண விழையாமல் மனதில் பட்டதை அடித்துச் சொல்லும் பண்புடைய பத்திரிகையாசிரியராகப் பாரதியார் திகழ்ந்தார் .வங்கப் புரட்சி வீர்ர் பூபேந்திரநாத் தத்தாவின் “ யுகாந்தர் “ – பிரம்மபாந்த உபாத்யாயாவின் “ சந்தியா “ – திலகரின் “ மராட்டா “ – கேசரி – விபின் சந்திர பாலரின் “ வந்தேமாதரம் “ இதழ்களை வழிகாட்டிகளாகக் கொண்டிருந்தார்.
கேலிச் சித்திரம்
அரசியலில் கேலிச் சித்திரம் ( கார்ட்டூன் ) பதிப்பு பாரதியாரிடமிருந்தே தொடங்கியது என்பது வரலாற்று உண்மை. இது பற்றி பாவேந்தர் பாரதிதாசன் கூறும்போது “ அந்தச் சித்திரம்தான் முதலில் என்னைத் தன் பரிவாரங்களின் பக்கமாக இழுத்தது. அது என்னை இன்னாரென்று எனக்குக் கூறிற்று “என்கிறார். முற்றிலும் கேலிச் சித்திரங்களே அடங்கிய இதழை வெளியிடவும் திட்டமிட்டிருந்தார். 1906 நவம்பரில் மதுரை “ விவேக பாநு “வில் சோழவந்தான் மகா வித்துவான் அரசஞ் சண்முகனார் – புலவர் மு.ரா.கந்தசாமிக் கவிராயர் ஆகியோர் இயற்றிய “ வந்தேமாதரச் செய்யுள்கள் “ வெளிவந்தன. இதை ஒரு முக்கியமான அறிகுறி என்று குறிப்பிட்ட பாரதியார் “ இது ஆகுபெயரா – அன்மொழித் தொகையா ? தொல்காப்பியத்திற்கு இவ்விடத்தில் நச்சினார்க்கினியர் கூறிய உரை பொருந்துமா ? என்பது போன்ற இலக்கண விவகாரங்களைச் சிறிது அகற்றி விட்டு வந்தேமாதரத் தத்துவத்தின் திட்ப நுட்பங்களைக் கூறிய பழந் தமிழ்ப் புலவர்களின் ‘ புதிய தமிழ் ‘ நாட்டத்தைப் பாரதியார் மகிழ்ச்சி பொங்க வரவேற்றார். பழந்தமிழ்ப் புறநானூற்றுப் பாடல்களை தமது காலத்து தேசபக்திப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திய முதல் தமிழ்க் கவிஞர் பாரதியார். ‘தென்றலுடன் பிறந்த பாஷை ‘(4.8.1906) – தமிழ்ப் பாஷையின் இனிமை (4.8.1906) – கன்னித் தமிழ் (7.11.1906) முதலான கட்டுரைகள் “ இந்தியாவில் “ தமிழ் வளர்ச்சிச் சிந்தனைகள் சிலவற்றை வெளிப்படுத்தின.
வந்தேமாதரம் பாடல்
ஜெர்மன் சுயாட்சிக்கு அனுகூலமாக ஜெர்மன் மொழியில் மொழி பெயர்த்து வந்தேமாதரம் பாடல்களை கார்ல் பிளைன்ட் வெளியிட்டார். ஜெர்மன் நாட்டு விடுதலைப் போருக்கு இப்பாடல் 
பயன்பட்டது.

ஞான ரதம்

1909 பிப்ரவரி 13 இல் இலக்கியப் பகுதியில் ஞானரதம் இடம் பெற்றது.
நவீனப் படைப்பிலக்கியங்களாக செல்வ கேசவராய முதலியாரின் ‘ கற்பலங்காரம்” ‘(14.7.1906)- ஜி.வேணுகோபால நாயுடுவின் ‘ எனது நெடுங்கனவு ’ –பாரதியாரின் ‘ஸ்வர்ணகுமாரி’(2.2.1907) ‘சிறுவர்க்கான கதை’ எனும் தலைப்பில் (2.1.1909) முதலியன இந்தியாவில் வெளிவந்தன. மொழி பெயர்ப்புத் துறையிலும் பாரதியார் முத்திரை பதித்தார் .இங்கர்சாலின் The Liberty of Woman  (19.1.1906) –அரவிந்தரின் To the see எனும் கவிதை கடல் என்ற தலைப்பில் மொழி பெயர்க்கப்பட்டு இலக்கியப் பகுதியிலும் (12.6.1909) –சவர்க்காரின் முதல் இந்திய சுதந்திரப் போர் எனும் மராட்டிய நூல் ஹிந்துஸ்தான் ஸ்வதந்திர யுத்தம் என்ற தலைப்பில் வ.வே.சு.அய்யராலும் மொழி பெயர்கப்பட்டு வெளியிடப்பட்டன.. பத்திரிகைத் தடைச் சட்டத்தை பிரிட்டிஷ் அரசு கட்டவிழ்த்து விட்ட போது ராஜாராம் மோகன்ராய் கடுமையாக எதிர்த்தார் 1906 முதற்கொண்டே பாரதியார் எதிர்த்து எழுதத் தொடங்கி விட்டார். இச்சட்டத்தால் “ தண்டனைகள் “ பெற்ற பத்திரிகைகள் ஸ்வராஜ் (பம்பாய்) –விஹாரி (அலகாபாத்)- கேசரி – வந்தேமாதரம் – தேச சேவக் – ஸ்வராஜ் (பெஜவாடா)- ஸந்தியா ஸஞ்சீவினி – இன்குலாப் – இந்தியா (மதராஸ்)- ஸ்வதேசமித்திரன் – ஸ்வராஜ் (லண்டன்)- ஹுத்வாதி – ஹிந்துபஞ்ச் முதலியன .பாரதியாரின் நடை நெருப்பு மழையாகப் பொழிந்தது .நமது வலக் கையில் மின்னல் தோன்றுக – நமது வாக்கில் மின்னல் அடித்திடுக என்பார். சொற்களைக் கூர் தீட்டி அம்புகளாய்ப் பாய்ச்சுவதில் பாரதியார் வல்லவர். இலக்கணத் தமிழைக் காட்டிலும் பழகு தமிழே பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினார். “ நீ எழுதுகிற விஷயத்தை இங்கிலீஷ் தெரியாத ஒரு தமிழனிடம் படித்துக் காட்டு அவனுக்கு நன்றாக அர்த்தம் விளங்குகிறதா என்று பார்த்துக் கொண்டு பிறகு எழுது .அப்போதுதான் நீ எழுதுகிற எழுத்து தமிழ்நாட்டிற்குப் பயன்படும் “ என்பது பாரதி வாக்கு.

விஜயா : மண்டயம் குடும்பத்தாரின் தமிழ் இதழியல் தொண்டில் மலர்ந்தவைகளில் இதுவும் ஒன்று. இந்தியா வார இதழ் சென்னையில் நின்று போனதும் இதை நிறைவு செய்ய விஜயா நாளேடு தொடங்கப்பட்டது.19.10.1908 இல் சென்னை திருவல்லிக்கேணியிலிருந்து வெளிவந்தது.புதுச்சேரியில் கிருஷ்ணஜெயந்தியன்று 7.9.1909 இல் வெளிவந்தது .இது இந்து – முஸ்லிம் ஒற்றுமைக்குக் குரல் கொடுத்தது.நாள்தோறும் செய்தி விளக்கச் சித்திரங்களை முதன் முதலில் வெளியிட்ட நாளேடு இது என்பது குறிப்பிடத் தகுந்தது.1910 ஏப்ரலில் இது நின்று போனது. பின்னர் 1908 இல் சூரியோதயம் உதித்தது .இதன் உரிமையாளர் சைகான் சின்னய்ய நாயுடு.இது தவிர தேசசேவகன் எனும் வார இதழை 1922 முதல் 1924 வரை நடத்தினார் இதில் கே.எஸ்.பாரதிதாசன் எனும் பெயரில் பாவேந்தர் தேசியப் பாடல்களை எழுதினார். சூரியோதயம் எனும் தமிழ்த் தலைப்பிற்கும் பிரெஞ்சுத் தலைப்பிற்கும் இடையில் எமிலி ஜோலாவின் “சுதந்திரம் இல்லாமல் முன்னேற்றம் இல்லை “ என்ற இலட்சிய வாசகம் இடம் பெற்றிருந்தது.1910 இல் பிரிட்டிஷாரின் அடக்குமுறையால் சூரியோதயம் மறையலாயிற்று.பின்னர் “ கர்மயோகி’ பிறந்தது. அரசியல் கொந்தளிப்பு இல்லாமல் ஆன்மிக அமைதியுடன் பத்திரிகையாசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பை கர்மயோகி பாரதியாருக்கு வழங்கியது.முதலில் மாத இதழாகவும் பின்னர் மாதமிருமுறையாகவும் வெளிவந்தது.1910 இல் அரவிந்தரும் புதுச்சேரி வந்து நிரந்தரமாகத் தங்கியது இந்திய தேச பக்தர்களுக்குப் பெரும் பேறாய் அமைந்தது. பாரதியாரையும் அரவிந்தரையும் நன்கறிந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் “ அரவிந்தர் யோகம் “ எனும் அற்புதமான கவிதையில் கீழ்க்கண்டவாறு விளக்கியுள்ளார்.

ஆங்கிலத்துப் பெருங்கவிஞன் அரவிந்தகோ
 அணிநாட்டின் பிணிநீக்கும் கவலை யல்லால்
தீங்கியலும் சிறுசெயலில் பணத்தில் காசில்
 சிறிதேனும் கவலையுறக் கண்ட தில்லை
பாங்கன்ஒரு வன்கிடைத்தான் அரவிந்தர்கோ
 பாரதிஓர் தமிழ்க்கவிஞன் நாட்டின் அன்பன்
தாங்கியது நாடுதான் இரண்டு பேரும்
 சொல்லாலே உணர்வு தந்தார் ஏடும் தந்தார்
வங்காள சிங்கமவன் ‘ எண்ணம்’ செய்வான்
 வரிப்புலி பாரதி அதனைத் தமிழாய்ச் செய்வான்
வங்காளச் சிங்கமவன் ஆங்கிலத்தில்
 வழங்குவதும் வழக்கம்தான் ஏடுகள் போய்
எங்கெங்கும் முழக்கமிடும் அவர்கள் சொன்ன
 இறவாத மொழிகளிலே ஒன்றைக் கேளீர்
“உங்களுக்கே யோகத்தின் உண்மை சொல்வோம்
 ஊருக்கு ழைப்புதான் யோகம்” என்றார்

1910 பிப்ரவரி இதழில் ‘ கிருஷ்ணனுக்கும் நமது பத்திரிகை படிப்பவருக்கும் அந்தரங்க சம்பாஷனை ‘ எனும் கட்டுரை வெளி வந்தது. இதில் “கர்மயோகி மூலமாக நான் உனக்கு ரஸமான – ரஸமில்லாத சில கதைகளையும் வியாக்கியானங்களையும் எடுத்துச் சொல்லி வீண்பொழுது போக்க வேண்டுமென்பது நோக்கமில்லை. உனது அந்தரங்க குறைகள் துன்பங்கள் இவற்றில் கலந்து உன்னுடன் உயிருறவு ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்பது என்னுடைய நோக்கம்.  பாரதா அறிவில்லாதார் செய்கையில் பற்றுடையோராய் எப்படித் தொழில் செய்கிறார்களோ அப்படி அறிவுடையோன் பற்றை நீக்கி உலக நன்மையை நாடித் தொழில் செய்ய வேண்டும் “ என்று பத்திரிகையின் நோக்கத்தை பாரதி விளக்குகிறார். கர்ம யோகியில் பகவத் கீதையை கவிதை வடிவில் தமிழாக்கம் செய்திருக்கிறார்.கட்டுரை நீளுமாதலால் அருமையான அவைகளையெல்லாம் இங்கே என்னால் தர இயலவில்லை.ஒன்றை இங்கே குறிப்பிடாமல் இருக்க இயலவில்லை.1910 மே – கர்மயோகியில் ‘தமிழ் ஸாகித்யத்தில் நவமார்க்கம்’ எனும் விமர்சனக் கட்டுரையை லட்சுமண சங்கரன் என்பவர் எழுதினார்.அதன் ஒரு பகுதி வருமாறு : “புலவர்காள்! காவடிச்சிந்துக்கள் – உலா – மடல்கள் பாடினது போதும். கலிங்கத்துப் பரணிகள் பாடுங்கள்.வீர ஸாகித்யம் பெருகட்டும். காம ஸாகித்யம் போதும்.இயல் – இசை – நாடகம் எனும் ஸாகித்யத்தின் மூன்று பிரிவுகளிலும் தமிழ் ஸாகித்யம் மிகவும் நலிவடைந்திருக்கிறது.இப்பொழுது பாரத தேசத்திற் பெருகி நிற்கும் “நவமார்க்கம் “எனும் பிரளயம் பெருகி சீர்குலைந்து நன்மை நாடுகிறது என்பதற்கு அறிகுறியாக மனோபாவ பூர்த்தியான ஸாகித்யம் வளர ஆரம்பித்திருக்கிறது.இசையில் சுப்பிரமணிய பாரதியாரது ‘ஸ்வதேச கீதங்கள் ‘ எனம் ஹிருதயத்தைப் பிளக்கும் பாக்கள் உதித்திருக்கின்றன .இயலில் ‘ஞானரதம்’ என்னும் நவீனம் – நவசாகையின் அறிகுறியாக விளங்குகிறது.இந்த நவீனகத்தில் ஆசிரியர் உபயோகித்திருக்கும் வங்க சப்த சித்திரங்கள் நவீனகத்திற்கு ஓர் புதுமை. நவ ஸாகித்யம் தேக்கமடைந்து நில்லாமல் எக்காலமும் பெருகி வளர்வதாக என்பதே நமது கோரிக்கை “ “ தெரியாது” என்ற வார்த்தையும் “முடியாது” என்ற வார்த்தையும் பாரத பக்தர்கள் தவிர ஏனையோரின் பொருட்டாகவே உண்டாகியிருக்கின்றன.இவ்வுண்மை உங்கள் மனதில் எப்போதும் திடமாக நிற்கட்டும் “ இவ்வாசகங்கள் எதை உணர்த்துகின்றன ? இறையுணர்வும் – இலக்கிய உணர்வும் – நாட்டுணர்வும் சிறை வாழ்க்கையிலும் சிறந்தோங்கியிருந்ததை கர்மயோகி வெளியிட்டது.மாஜினியின் இளைய இத்தாலி YOUNG ILALY பின்பற்றியது பால பாரதா. இது மன்தாபிமான தேசியவாதம் HUMANITARIAN NATIONALISM  ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டது.ஒரே ஒரு தலைவன் – கடவுள் – ஒரே சட்டம் – முன்னேற்றம்.இதன் ஒரே ஒரு விரிவுரையாளர் மக்கள். தனி நார்கள் ஒரு நாட்டின் குடிமக்களாகக் கருதப்படுவது போல நாடுகள் மனிதாபிமானத்தின் குடிமக்கள். – என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டது பால பாரதா இதழ்.

பாரதியாரின் பத்திரிகைத் துறைப் பணி சுதேசமித்திரனில் தொடங்கி சுதேசமித்திரனிலேயே நிறைவு பெறுகிறது.காந்தியடிகளின் இயக்கத்தை “ இந்தியாவில் பரவி வரும் ஸாத்விக தர்மக் காற்று என்று பாரதியார் புகழ்ந்தார். அவர் மதங்கொண்ட களிரெறிந்து காலனுக்கு பலியாகவில்லை. 1921 ஆகஸ்ட் 21 ஆம் தேதி ஸ்ரீ ரவீந்திரர் திக் விஜயம் என்ற கட்டுரையை ஐரோப்பாவில் தாகூருக்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பை உளமாறப் புகழ்ந்து பாராட்டியுள்ளார். இதுவே அவர்தம் இறுதிக் கட்டுரையாகக் கருதப்படுகிறது.
 பத்திரிகை உணர்வு என்பது அவருடைய கவிதை உணர்வுக்குச் சமமாக கொலு வீற்றிருந்தது.” அமிர்தம்” எனும் பெயரைத் தேர்ந்தெடுத்து  தாமே ஆசிரியராகப் பதிவு செய்து சுதேசமித்திரனில் விளம்பரமும் செய்கிறார். ஆனால் அவர்தம் ஆசை நிறைவேறவில்லை. ஆனால் அவர்தம் எழுத்துக்கள் அமரநிலையில் அனைவரின் இதய இதழில் நீங்கா இடம் பெற்றிருக்கின்றன. மகா கவி புகழ் வாழ்க – வளர்க –உயர்க – ஓங்குக!

குறிப்பு :
மகாகவி காலத்துத் தமிழ் நடையை இக்காலம் அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே அவருடை வாசகங்களை அப்படியே தந்துள்ளேன்



No comments:

Post a Comment