Thursday, 10 October 2013

தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழாவில் சிங்கப்பூரில் ஆற்றிய உரை

தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழாவில்
சிங்கப்பூரில் ஆற்றிய உரை
  
பொருத்தமான நேரத்தில் – பொருத்தமான இடத்தில் – பொருத்தமானவர்களைக் கொண்டு – பொருத்தமான அமைப்பு - பொருத்தமான முறையில் விழா எடுத்திருக்கிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இவ்விழாவில் பங்கேற்பதில் பெருமிதமும் பெருமகிச்சியும் அடைகிறேன். இஸ்லாமிய சகோதரர் ஒருவர் – ரோமன் கத்தோலிக்க குருவிற்கு – சைவப் பழத்தைத் தலைவராக்கி – வைணவப் பெயருடையேனான என்னைப் பேச வைத்து – தினகரன் பிரகாசிக்க – பண்ணீர் நண்ணீர் தெளிக்க – வீரமணி ஒலிக்கப் பரவசமூட்டும் இவ்விழா – மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாக விளங்கும் சிங்கைத் திருநாட்டிலன்றி – கங்கைக் கரையிலோ – காவிரி நடுவுமாட்டோ – யமுனைக் கரை நகரிலோ நடக்குமா ? ஈழம் ஈன்றெடுத்த தனிப்பெரும் தமிழ்த்தூதர் – தவத்திரு நாகநாதன் கணபதிப் பிள்ளை சேவியர் நிக்கோலஸ் ஸ்ரனிசுலாசு தனிநாயகம் அவர்கள் இயேசு நாதரின் பொறையும் – புத்த பிரானின் அகிம்சையும் – நபிகள் நாயகத்தின் சகோதரத்துவமும் – சைவரின் அன்பும் – வைணவரின் சரணாகதிக் கோட்பாடும் கொண்டிருந்த பெருமகனராகத் திகழ்ந்தார். சமய – சமரச நன்மார்க்கத்தை – சன்மார்க்கத்தைத் தம் மார்க்கமாகக் கொண்டிருந்தார். தமிழ்மொழி இந்துக்களுக்கு மட்டுமே உரியதன்று என்றவர் தன்னை நன்றாகத் தமிழ் செய்த தனிநாயகனாக உலா வந்தார்.

 லத்தீன் சட்டம் மற்றும் மருத்துவ மொழியானால் – ஜெர்மானியம் அறிவியலின் மொழியானால் – ஆங்கிலம் வணிக வர்த்தக மொழியானால் தமிழ் பக்தியின் மொழி எனப் பிரகடனப்படுத்தினார். அது தூய்மைத்துவத்திற்கான பக்தி – என தமிழ்மொழியின் தனித்துவத்தை உணர்த்திய தமிழறிஞர் தனிநாயக அடிகளார்.
  நம்மவர்கள் மத்தியில் – நான் தாய்த் தமிழகத்தைக் கூறுகிறேன் – யாருக்கு விழா எடுப்பது – எதனை நினைவு கூறுவது என்ற விவஸ்தையே இல்லாத காலகட்டத்தில் சென்ற இரண்டு மாதங்களுக்கு முன் இதே 20 ஆம் தேதி யாழ்ப்பாணத்திலே – வழிபாடு – ஆய்வரங்கம் – பாட்டரங்கம் உரைக்கோவை – பட்டி மன்றம் என முழுநாள் விழா நடைபெற்றது. நண்பர்களே ! தமிழ் தமிழகத்திலே பிறந்தது. யாழ்ப்பாணத்திலே வளர்ந்தது. சிங்கைத் திருநாட்டில் புகுந்தது. பிறந்த வீட்டை விட புகுந்த வீட்டில் பூவோடும் பொட்டோடும் பட்டோடும் புன்னகையோடும் பொன்னகையோடும் வாழ்வதைப் பார்க்கும் தமிழ் அன்னை சொரியும் ஆனந்தக் கண்ணீர்தான் சிங்கையில் நாள்தோறும் வளாது பொழியும் வான்மழை எனில் மிகையாமோ ? நல்லாட்சியும் தேன்தமிழ்ச் சொல்லாட்சியும் நாள்தோறும் நடைபெறும் சிங்கைத் திருநாட்டில் நடைபெறுவது மகிழ்ச்சிக்குரிய ஒன்றுதானே ?

  இலக்கியவாதிகள் தமிழுக்குச் செய்த சேவையை விட ஆன்மிகவாதிகள் தமிழ் இலக்கியங்களுக்கு ஆற்றிய பணி அளப்பரியது. வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த ஜி.யூ.போப் – ஒப்பிலக்கணம் கண்ட கால்டுவெல் – வீரமாமுனிவர் போன்றோர் தமிழ்மொழி கற்று – தமிழர்களாகவே வாழ்ந்து தமிழ் இலக்கியங்கள் பல படைத்தனர். ஆனால் தனிநாயகம் அடிகளார் இளமையில் ஆங்கிலத்தில் பெரும் புலமை கொண்டவராக இருந்தார். பின்னர் லத்தீன் – இத்தாலியம் – பிரஞ்சு – ஜெர்மன் – ஜப்பானியம் – போர்த்துகீசியம் – ருஷ்யம் – கிரேக்கம் – ஹீப்ரு – சிங்களம் கற்றுத் தேர்ந்து – அந்த மொழிகளிலெல்லாம் தமிழ் இலக்கியங்களைக் கொண்டு சென்ற தனித்துவம் தனிநாயக அடிகளாரின் தனியுரிமை. தமிழ் இலக்கியங்களை மற்ற மொழிகளில் மொழி பெயர்த்து அந்நாட்டவர் உணர்ந்து கொள்ளுமாறு செய்த அரும்பணி தனிநாயகம் அடிகளாருடையதாகும். இந்த வகையில் மகாகவி பாரதியாரின்  “ யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் “  என எடுத்துரைத்தார்.

சமயப் பிரச்சாரகராகத்தான் தமிழகம் வந்தார். வடக்கன்குளப் பள்ளியில் துணைத்தலைமை ஆசிரியராக அமர்த்தப்படும்போதுதான் அவருக்கும் தமிழ் கற்க வேண்டும் என்ற வேட்கை மேலிடுகிறது. அண்ணாமலைப் பல்கலைக் கழகம் கைகொடுக்கிறது. 1945 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சேருகிறார். அவர்தம் புலமையையும் அறிவுக் கூர்மையையும் கண்டு வியந்த பன்மொழிப் புலவர் தெ.போ.மீனாட்சி சுந்தரனாரும் டாக்டர் அ.சிதம்பரநாதரும் இளங்கலை வகுப்பு படிக்காமலேயே முதுகலை வகுப்பிற்குச் செல்ல அனுமதிக்கின்றனர். 1949 ஆம் ஆண்டு இவர் எழுதிய “ தொல்தமிழ்க் கவிதையில் இயற்கை “ Nature in Ancient Tamil Poetry “ என்ற ஆராய்ச்சிக் கட்டுரை மூலம் எம்.லிட். பெறுகிறார் .பின்னர் இது புகழ்வாய்ந்த கட்டுரை என மதிக்கப்படுகிறது. 1954 – 55 ஆம் ஆண்டுகளில் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற் கொள்ளுகிறார்.

 இவரது reference Guide to Tamil studies என்ற 122 பக்க நூலில் 1335 நூல்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இதில் லத்தீன் – பிரெஞ்சு – ஜெர்மணி – ரஷ்யன் மலாய் போன்ற மொழிகளில் தமிழியல் பற்றி வெளியான நூல்கள் பற்றிய தகவல் தொகுப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத் தகுந்ததாகும்.
  தனி நாயகம் அடிகளார் தனி மனிதரல்லர் – அவர் ஒரு ஸ்தாபனம் . ஆம் ஒரு நிறுவனம் ஆற்ற வேண்டிய பணிகளைத் தனி மனிதராக நின்று செயல்படுத்திக் காட்டிய சாதனையாளர்.
  போப்பாண்டவரின் வாட்டிகன் நகரில் இறையியலில் முனைவர் பட்டம் பெற்றார். அது அல்ல முக்கியம் . வாடிகன் வானொலியில் பலமுறை தமிழில் சொற்பொழிவு ஆற்றியிருக்கிறார் என்பதுதான் முக்கியம். இக்கட்டுரை 1960 ஆம் ஆண்டு நூல் வடிவம் பெறுகிறது.

  1961 இல் சென்னையில் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தைத் தோற்றுவித்தார் (Academy of Tamil Culture) . உலகத் தமிழ் ஆய்வு மையத்தின் சார்பாக Journal of Tamil Studies  எனும் இதழாசிரியராகவும் பணியாற்றினார். 1952 இல் தமிழ்த் தூது என்ற நூல் வெளியிடுகிறார். இதனுடன் சேர்ந்து 137 நூல்கள் படைத்திருக்கிறார்.
 தமிழைப் பற்றிய ஐரோப்பிய மொழிகளில் வெளிவந்த நூல்களைத் தொகுப்பதன் மூலம் பன்னாட்டு ரீதியில் தமிழ் மொழியை உலகின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். திருக்குறளை யாத்தவர் திருவள்ளுவர் என்பது நாம் அறிந்ததுதான். ஆனால் திருக்குறளை எழுதாத  இன்னொரு திருவள்ளுவரை உங்களுக்குத் தெரியுமா ? அடிகளாரின் அண்ணாமலைப் பல்கலைக் கழகச் சொற்பொழிவுகள்தான் “ திருவள்ளுவர் “ என்று மகுடமிட்டுப் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
  1964 தைத் திங்களில் புது தில்லியில் நடைபெற்ற கீழ்த்திசை ஆய்வாளர் மாநாட்டில் தமிழகமும் தமிழ் மொழியும் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வு கண்டு பெரிதும் மனம் நொந்து தமிழறிஞர்களை ஒன்றுகூட்டி தாய்த் தமிழுக்கான உலகளாவிய கருத்தரங்கு அல்லது மாநாடு ஏன் நடத்தக் கூடாது என விவாதித்ததன் விளைவாகத் தோன்றியதே உலகத் தமிழாராய்ச்சி மன்றம். 1967 இல் நடைபெற்ற கீழ்த்திசை ஆய்வாளர் மாநாட்டின்போது இம்மன்றம் யுனெஸ்கோ ஆதரவு பெற்ற அமைப்பாகவும் மாற்றப்பட்டது.

மலேயாப் பல்கலைக் கழகத்தில் இந்தியவியல் துறையில் பயிற்று மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும் என நீலகண்ட சாஸ்திரி முன்மொழிந்தபோது – நம் தமிழவேள் கோ.சா.ஆதரவுடன் இத்தீர்மானத்தை முறியடித்து தமிழே பயிற்று மொழியாக இருக்கப் போராடி வெற்றி பெற்றார். இந்தியவியல் துறையை தமிழியல் துறையாக மாற்றிய அடிகளாருக்குப் பின்புலமாக விளங்கியவர் தமிழவேள் கோ.சா.அவர்களே.மிகப் பெரிய நூலகம் உருவாகவும் காரணமாக இருந்தார் .திருக்குறள் சீன மொழியிலும் மலாய் மொழியிலும் மொழியாக்கம் கண்டது.
 தமிழ்த்தாத்தா உ.வே.சா. தமிழ்ச் சுவடிகளைத் தேடிக் கண்டு பிடித்துத் தமிழுக்கு உரம் சேர்த்தார். தனிநாயகம் அடிகளார் உலக நாடுகளுக்கெல்லாம் சென்று ஆங்காங்கே உள்ள நூலகங்களிலும் பிறவிடங்களிலும் தமிழ் நூல்களும் தமிழைப் பற்றிய நூல்களும் இருக்கின்றனவா எனத் தேடினார். பிற நாட்டு நூலகங்களில் தேடுவாரற்றுக் கிடந்த பல தமிழ் ஏடுகளையும் ஐரோப்பியர்களால் பதிப்பிக்கப்பட்ட ஆரம்ப கால அச்சு நூல்களையும் தமிழ் உலகிற்கு மீட்டுக் கொணர்ந்தார். 1956 ஆம் ஆண்டு உருவான கார்த்தீயா – 1578 இல் எழுதப்பட்ட தம்பிரான் வணக்கம் – 1579 இல் எழுதப்பட்ட கிறித்துவாணி வணக்கம் – போர்த்துகீசிய – தமிழ் அகராதி மற்றும் நியூசிலாந்தில் தமிழன் பதித்த சுவடுகள் முதலியவற்றைத் தமிழ்கூறும் உலகம் அறியச் செய்தார்.
  
பண்பாடு – ஒப்பிலக்கியம் – கல்வி – இறையியல் – புவியியல் – வரலாறு – மொழியியல் – மெய்யியல் – நாட்டுப்புற இயல் – கவின்கலை போன்ற பல்வேறு துறைகளுடன் தமிழ் இலக்கிய ஆய்வைத் தொடர்பு படுத்தி நுணுகி ஆராய்ந்திட முனைந்தவர்களில் முதன்மையானவர் தனிநாயக அடிகளார். தாய்லாந்து மன்னர்தம் முடிசூட்டு விழாவில் மணிவாசகப் பெருமானின் “ ஆதியும் அந்தமுமில்லா அரும் பெரும் ....” என்ற திருவாசகப் பாடல் இடம் பெறுவதை உலகறியச் செய்தார். ரோமாபுரியில் வீரமாமுனிவர் கழகம் நிறுவினார். 1966 ஏப்ரல் 17 முதல் 23 ஆம் தேதி வரை நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் 132 பேராளர்களின் 146 கட்டுரைகள் படிக்க காரணமாக இருந்தார். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். காலம் கருதி சுருக்கிக் கூறினேன். ஆசியாவில் வெளி வந்த முதல் அச்சு நூல் தமிழ் நூல் என உலகுக்கு உரைத்த உத்தமர். திருக்குறளை அர்த்த சாஸ்திரத்துடனும் பிளாட்டோ – அரிஸ்டாட்டிலுடனும் ஒப்பிட்டுப் பேசியவர். இதனால்தான் சொல்லின் செல்வர் தமிழ் மூதறிஞர் ரா.பி.சேதுப் பிள்ளை தமிழ் உலகின் சின்னம் என அடிகளாரைப் பாராட்டினார். உலகின் 51 நாடுகளுக்குச் சென்று தமிழைப் பரப்பிய பேரறிஞர் தமிழ்த் தூதர் தவத்திரு தனிநாயகம் அடிகளார் தமது இறுதிக் காலத்தில் யாழ்ப்பாணத்தில்தான் வாழ்கிறார். வேலனையில் நடைபெற்ற வான் புகழ் வள்ளுவர் விழாவில்  “ கண்களில் ஒளி மங்குகிறது. கைகளோ நடுக்கம் கொள்ளுகின்றன. ஆனால் என் நினைவெல்லாம் தமிழின்மீதே தவழ்ந்து கொண்டிருக்கிறது “ என்ற அவர்தம் உரை நம் நெஞ்சினை நெகிழ வைக்கிறது. தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்களும் தமது வாழ்நாளின் இறுதியில் இதே வார்த்தைகளைச் சொன்னார். நண்பர்களே ! தமிழுக்குத் தொண்டு செய்வோர் இறப்பதில்லை. நமது தமிழவேள் கோ.சா. அவர்களும் தவத்திரு தனிநாயகம் அடிகளாரும் தமிழ் உள்ள வரை வாழ்வார்கள். அவர்கள் புகழ் ஓங்கும். 

No comments:

Post a Comment