வள்ளற்பெருமான் – திருவருட் பிரகாச வள்ளலார் என அன்போடு அழைக்கப்படும் சிதம்பரம் இராமலிங்க அடிகளார் இருபதாம் நூற்றாண்டின் ஒப்புயர்வுற்ற ஆன்மிகப் புரட்சியாளர். ஓதாதுணர்ந்த உத்தமப் பெருந்தகை. ஓராயிரம் வருடம் ஓய்ந்தே கிடந்த பின்னர் வாராது போல் வந்த மாமணி.
தாமே முழுதுணர்ந்த தண்டமிழ் ஆசான்.
அகத்தே கறுத்து – புறத்தே வெளுத்திருக்கும் இவ்வுலகரனைவரையும் இச் ஜெகத்தே திருத்தி இகத்தே பரத்தை வருவிக்க இறைவனால் வரவழைக்கப் பட்டவர் எனத் தம்மைப் பிரகடனப் படுத்திக் கொண்ட மகான். செத்த பின்னர் சிவ லோகம் – வைகுந்தம் அல்ல. ஆம். வானகம் இங்கே வந்திட வேண்டும் என்று சூளுரைத்தோர் இரண்டே இரண்டு தமிழ்ப் புலவர்கள் மட்டுமே. மகா கவி பாரதியாரும் வள்ளற் பெருமானும்.
புறப்பார்வைக்கு வெள்ளையாகவும் அகத்தே கறுத்தும் வாழ்கின்ற இவ்வுலகரனைவரையும் இவ்வையகத்திலேயே திருத்தி வானகத்து இன்பங்கள் அனைத்தையும் அனுபவிக்கின்ற சொர்க்கபுரியைத் தோற்றுவிக்க இறைவன் அனுப்பியதாகக் கூறுகிறார்.
ஏன் – ஒப்பற்ற புரட்சியாளர் என்று கூறுகிறோம் ?
சின்னஞ் சிறு வயதினிலே கண்ணாடி முன் நின்று –
சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் – திகழ் கடப்பந்
தார்கொண்ட பன்னிரு தோள்களுந் தாமரைத் தாள்களுமோர்
கூர்கொண்ட வேலும் மயிலும் நற்கோழிக் கொடியும் அருட்
கார்கொண்ட வண்மைத் தணிகாசலமும் என் கண்ணுற்றுதே
என்று பாடுகிறாரே ! கண்ணாடி முன்னே முருக வேள் மாத்திரமல்ல – வேலும் மயிலும் – கோழிக் கொடியும் ஆறு வதனங்களும் பன்னிரு தோள்களும் தணிகை மலையும் தோன்றிய அற்புதம் யாருக்கு வாய்க்கும் ?
இதற்காகப் புரட்சியாளர் என்று சொல்லுகிறோமா ?
தண்ணீர் விளக்கெரித்த தகைமை கருதியா ?
செத்தாரை எழுப்பிய வியப்புமிகு நிகழ்வு பற்றியா ?
இவைகளுந்தான் – ஆனால் இவை பற்றி மட்டுமேயன்று. வள்ளற்பெருமான் சங்கம் அமைத்தார் – அதன் பெயர் சமரச சுத்த சன்மார்க்க சங்கம்.
முழக்கம் தந்தார் – அது
அருட்பெருஞ் ஜோதி – தனிப் பெருங்கருணை.
சபை தோற்றுவித்தார் – அதன் பெயர் சத்தி ஞான சபை.
முக்தி பெற வழி துலக்கினார் – அது சித்தி வளாகத் திருமாளிகை எனப் பெயர் பெற்றது.
சாலை கண்டார் – அது சத்திய தருமச் சாலையாயிற்று.
தத்துவம் தந்தார் – அது “ பசித்திரு – தனித்திரு – விழித்திரு “ என்பதாகும்.
கொடி கண்டார் – அது ஜோதிக் கொடி .மேற் புறம் முன்றில் ஒரு பங்கு மஞ்சள் .கீழ்ப்புறம் மூன்றில் இரண்டு பங்கு வெள்ளை.
கோட்பாடு தந்தார்.
“ எல்லாமுடைய அருட்பெருஞ் ஜோதி அற்புதக் கடவுளே !
இது தொடங்கி எக்காலத்தும் – சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள் – மதங்கள் – மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும் - வருணம் ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனத்தில் பற்றா வண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்மநேய ஒருமைப் பாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்.
எல்லாமாகிய தனிப்பெரும் தலைமை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே ! தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம் ! வந்தனம்.
என்ற கோட்பாட்டினை சுத்த சன்மார்க்கிகள் அனைவரும் பொன்னே போல் போற்ற வேண்டும் என விரும்பினார்.
ஜீவகாருண்யத்தைப் பின்பற்றுவதை ஒழுக்கமாகப் பிரகடனப் படுத்தினார். உலக சகோதரத்துவத்தை வலியுறுத்திய வள்ளற்பெருமான் ஆன்ம நேய ஒருமைப்பாட்டினை உரிமையாகத் திகழ வேண்டுமென விழைந்தார்.
தங்கமே யனையார் கூடிய ஞான
சமரச சுத்தசன் மார்க்கச்
சங்கமே கண்டு களிக்கவுஞ் சங்கஞ்
சார்திருக்கோயில் கண்டிடவுந்
துங்கமே பெறுஞ்சற் சங்கநீ டூழி
துலங்கவுஞ் சங்கத்தி லடியேன்
அங்கமே குளிர நின்றனைப் பாடி
யாடவு மிச்சைகா ணெந்தாய்
என எல்லாம் வல்ல தனித் தலைமைக் கடவுளை – அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டினார்.
இப்படி ஒரு ஒப்புமை கூறவியலாத அற்புதப் பெருமானை உலகம் கண்டதுண்டா ?
மிக ஆழமான தமிழ்ப் புலமையோடு விளங்கினார். அடிகளாரது காலத்து தவத்திரு சங்கராச்சாரியார் சுவாமிகளுக்கும் இவருக்கும் ஒரு விவாதம் நடைபெறுகிறது. சங்கராச்சாரியார் – “ சமஸ்கிருதமே மொழிகளுக்கெல்லாம் தாய் “ என்று கூறுகிறார். அடிகளார் இதனை மறுக்கவில்லை.
மற்றவர்களைப் போல லாவணி பாடவுமில்லை. “ ஆயின் தமிழ் தந்தை மொழி “ என்றுரைக்கிறார். இது வெறும் வாதத்திற்குப் பதிலுரையன்று .
த்+அ = த
ம்+இ = மி
ழ்
த் + அ + ம் + இ + ழ் = தமிழ்
இவ்வைந்து எழுத்து அலகுகளும் ஆண் தன்மையுடையவை என நிரூபிக்கிறார். மகா கவி பாரதியாரும் இதனைப் பின்பற்றியே தமிழ் எந்தை மொழி என்று பேசுகிறார்.
இதனால் மட்டுமே அடிகளாரைப் புரட்சியாளர் என்கிறோமா ?
அவரது சமுதாய – சமூக சீர்திருத்தச் செயல்களே அவரை ஒரு ஆன்மிகப் புரட்சியாளராகப் பிரகடனப்படுத்துகின்றன. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினார் எனக் கேள்வியுற்றிருப்பீர்கள். ஆனால் உயிர்க்குலமனைத்தும் மேம்படப் பாடுபட்டவர் வள்ளற்பெருமான்.
இந்த நேரத்தில் பாரதியை நான் குறிப்பிட்டே ஆக வேண்டும்
விநாயக நான்மணி மாலையில் மகா கவி குறிப்பிடுவார் :
பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்
கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்
மண்மீதுள்ள மக்கள் – பறவைகள் – விலங்குகள் – பூச்சிகள் – புற்பூண்டு
மரங்கள் - யாவுமென் வினையால் இடும்பை தீர்ந்தே இன்பமுற்று
அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே செய்தல் வேண்டும். தேவ தேவா !
என்று எங்கிருந்து கேட்கிறார் தெரியுமா ? ஞான ஆகாசத்து நடுவே நின்று. மேலும் பேசுகிறார் : பூ மண்டலத்தில் அன்பும் பொறையும் விளங்குக ! துன்பமு மிடிமையும் நோவும் சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரும் இன்புற்று வாழ்க என்பேன். இதனை நீ திருச்செவி கொண்டு திருவுளமிரங்கி “அங்ஙனே ஆகுக” ! அப்படியே ஆகட்டும் என்று சொன்னால் போதும் . இந்நாள் – இப்பொழுதெ எனக்கு இவ்வரத்தினை அருள்வாய் ! சரணம்...சரணம் .
வள்ளற்பெருமானைப் பின்பற்றி அன்றே பாரதியார் வேண்டிய வரத்தை நம் பிள்ளைப் பெருமானும் தம் வாழ்க்கைத் தத்துவமாக ஏற்று உயிர்க் குலமனைத்தும் வாழ்ந்திட வழி துலக்கினார்.
இதனால் ஆன்மிகப் புரட்சியாளர் என்று அழைக்கிறோமா ? இல்லை.
இவையனைத்திற்கு மேலாக மிகச் சிறந்த சமுதாய சீர்திருத்தச் செம்மலாக விளங்கிய மேன்மையாலேயே ஒப்பற்ற ஆன்மிகப் புரட்சியாளர் என உலகம் போற்றுகிறது.
கண்மூடிப் பழக்கமெலாம் மண்மூடிப் போக அவர் பாடுபட்டார்.
இருட்சாதி தத்துவச் சாத்திரக் குப்பை இருவாய் புன்செயில் எருவாக்கிப் போட்டு – மருட்சாதி சமயங்கள் மதங்கள் ஆச்சிரம வழக் கெலாம் குழி கொட்டி மண்மூடிப் போட்டுத் தெருட்சாருஞ் சுத்த சன்மார்க்க நன்னெறி விளங்கப் பாடுபட்டார். தெய்வங்கள் பல பல பேசி பேதங்கள் வளர்ப்போரை வெறுத்தொதுக்க விழைந்தார். நலிதரு சிறிய தெய்வங்கள் பெயரால் நாட்டினில் உயிர்ப்பலி தருவதை அறவே களைய முனைந்தார். உயிர்க்கொலையும் புலைப் பசியும் உடையவர்களெல்லாம் உறவினத்தார் அல்லர் – புறவினத்தார் எனப் பிரகடனப்படுத்தினார். சாதியிலே மதங்களிலே சமயநெறிகளிலே சாத்திரச் சந்தடிகளிலே – கோத்திரச் சண்டையிலே அபிமானித்து அலைந்து அலைந்து வீணே நீர் அழிகின்றீரே என மனிதகுலத்தை இரக்கத்தால் அழைத்து மரணமிலாப் பெருவாழ்வு வாழ வழி வகுத்துக் கொடுத்தார்.
“ இவையனைத்திற்கு மேலாக – கணவன் இறந்தால் மனைவிக்குத் தாலி வாங்குதல் கூடாது. மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணப் பிரயத்தினம் செய்யவேண்டாம். பிள்ளைகள் இறந்தால் கர்ம காரியங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். இவற்றை உண்மையாக நம்பிச் செய்யுங்கள் “. நண்பர்களே ! சற்று சிந்தித்துப் பாருங்கள். எவ்வளவு புரட்சிகரமான கொள்கைகள் . எத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் வள்ளற்பெருமான் சொன்ன கருத்துக்கள் !
அது மட்டுமா ? இந்திரிய ஒழுக்கம் – கரண ஒழுக்கம் –ஜீவ ஒழுக்கம் – ஆன்ம ஒழுக்கம் எனப் போதித்து இவற்றைக் கடைப்பிடிப்போமானால் மரணமிலாப் பெரு வாழ்வு நிச்சயம் என உறுதியாகச் சொன்னார். இவை மட்டுமா ? சிவம் என்பதன் பொருளை அற்புதமாக விளக்கினார். சாகாக் கல்வி பற்றி எடுத்துரைத்தார். மாயத் திரைகளிலிருந்து விடுபட்டு சுவர்ண தேகம் – பிரணவ தேகம் – ஞான தேகம் பெறும் வழிமுறைகளுக்கும் வழிதுலக்கினார் .பெண்களுக்கு சமத்துவம் வழங்க வற்புறுத்தினார்.எளிய மருத்துவ முறைகள் கற்றுத் தந்தார். சுருங்கக் கூறின் வள்ளற் பெருமான் சொல்லாதது ஒன்றில்லை என்றே கூற வேண்டும். இவ்வுடம்பைப் பொன்னே போல் பாதுகாக்க வேண்டுமென்றார்.
வள்ளற்பெருமான் இறையருள் பெற்ற ஞானி மட்டுமல்லர் மனித சமுதாயத்தில் புரட்சிகரமான மாறுதல்களை விரும்பிய சீர்திருத்தவாதியுமாவார். இன்றைய நவீன உலகில் ஏற்பட்டுள்ள சமய – சமூக – பொருளாதார மாறுதல்கள் அனைத்தும் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் வள்ளலார் கண்ட கனவுகளாகும். அது மட்டுமன்று. அவர்தம் சம காலத்தவர்களான இராஜா ராம் மோகன் ராய் – தயானந்த சரஸ்வதி – இராம கிருஷ்ண பரமஹம்சர் ஆகியோரை விடவும் தீவிர சீர்திருத்தவாதியாகத் திகழ்ந்தார். சாதி சமய வேற்றுமைகளற்ற – ஏழை பணக்காரன் என்ற வர்க்கப் பாகுபாடற்ற – சகல ஆன்மாக்களிடமும் சம அளவில் அன்பு செலுத்துகின்ற ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை உலகம் முழுவதும் மலரப்பாடுபட்டவர். பாரத தேசிய ஒருமைப்பாட்டை அடித்தளமாக வைத்து அதன்மேல் மனித சமுதாய ஒருமைப்பாடு என்ற
வள்ளற்பெருமான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தம்மிற் கலந்து – அவனே தானாகவும் தானே அவனாகவும் மாறும் தருணம் வந்து விட்டதாகக் கூறுகிறார். தாம் ஆண்டவனுடன் அத்துவிதமானதோடு அமைதி பெற்றாரில்லை. தாம் பெற்ற இன்பம் ஒவ்வொரு ஆன்மாவும் பெற வேண்டுமென விரும்பினார். அதனால் தமக்குக் காட்சியளித்துத் தம்மிற் கலந்த அருட்ஜோதிக் கடவுள் அனைத்து உயிர்களுக்கும் காட்சியளிக்க வல்லது என்றும் கூறினார். ஜீவகாருண்ய ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை நெறி நின்று ஆண்டவனை வழிபட்டால் அவர்களுக்கும் அருட்ஜோதி காட்சியளிக்கும் என்பதில் ஐயமில்லை.
வள்ளற்பெருமான் தாம் மறையுமுன் தம்மைச் சுற்றியிருந்த அடியார்களுக்கு வழங்கிய உபதேச மொழிகள் உன்னிப்பாக கவனத்திற் கொள்ள வேண்டியவை.
“ நான் கொடுத்த போதனைகளை இந்துக்கள் செவியுற்றுக் கேளாத போதும் வேதாகமங்களில் அமிழ்ந்து கிடக்கும் அந்தரங்க கருத்துக்களைப் பத்திரமாய் வைத்திருக்கும் மகாத்மாக்கள் அந்நிய நாட்டாருக்கு வெளிப்படுத்துவார்கள். அந்நிய நாட்டார் அவைகளைச் சந்தோஷத்துடன் ஏற்றுக் கொள்ளுவார்கள்.
சாதி வம்ச முதலியவைகளால் ஏற்படும் வேற்றுமை அடைவினில் நீங்கப் போய் அகிலாம் சகோதரத்துவத்தின் மூலக் கருத்தின் சாரத்தை ஒத்துக் கொண்டு – இந்தியாவில் “ சகோதர அறம் “ நிலைநாட்டப் பெறும்.
உண்மையில் கடவுள் எனப்படுவது ‘ அகிலமாம் அன்பாம் ‘ .அஃது உலகிலுள்ள எல்லாவற்றிலும் பரிபூரண சமாதானத்தையும் சமரச நிலையையும் ஏற்படுத்தி அவைகளை நிலை நிறுத்துகின்றது..
ஒவ்வொருவருக்குள்ளும் அடங்கியிருக்கும் தெய்வீக சக்திகளை மானிடர்கள் தெரிந்து கொண்டதும் இயற்கை சக்திகளை மாற்றக்கூடிய அற்புத வல்லமைகளைப் பெறுவார்கள் .”
அடிகளாரின் மேற்கண்ட இறுதி வாசகங்கள் அற்புதமானவை. “ திரும்பவும் வருவேன் “ என்று சொன்னதாகவும் செய்தியுண்டு.
வள்ளற்பெருமான் புகழ் ஓங்குக.! சமரச சன்மார்க்க நெறி எங்கும் தழைக்க ! வையகத்தில் சாந்தியும் சமாதானமும் சந்தோஷமும் நிறைந்த சத்திய யுகம் மலருக ! வள்ளல்வழி நின்று புதியதோர் உலகம் படைக்க நம்மை நாம் அர்ப்பணிப்போம்.
No comments:
Post a Comment