பூமியை பூமித்தாய் எனப் போற்றுவர். நதிகளுக்குப் பெண்கள் பெயர் சூட்டிப்
பூரிப்பர். அலைமகள் என்பர் – கலைமகள் என்பர் – மலைமகள் என்பர். பேசாப்
பொருட்களுக்கெல்லாம் பெண்ணினத்தின் பெயர் சூட்டி பெருமை கொண்ட சமுதாயம் பேசும்
தெய்வங்களைப் போற்றாத நேரத்தில் புதுயுகக் கவிஞராக – புரட்சிப் புயலாக அவதரித்தவர்
மகாகவி பாரதியார். அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்று பேசிய காலம் பாரதி
வாழ்ந்த காலம். ஆனால் தொட்டிலை ஆட்டுங்கைகளைத் தொல்லுலகு ஆளுங்கைகளாகப்
பரிணமிக்கப் பாடுபட்டவர் பாரதி. ஆம்: மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் செய்திட
வேண்டும் எனப் பேச வைத்தவர்.
கண்டு
கேட்டு உண்டு உய்த்து உற்று அறியும் ஐம்புலனும் ஒண்தொடியின் கண்ணே உள என்ற வள்ளுவத்திற்குச்
செயல் வடிவம் கொடுத்தவர். பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு மண்ணடிமை
தீர்தல் முயற்கொம்பே என்று முழங்கிய பாவேந்தரின் குருநாதர். பெண்ணிற் பெருந்தக்க
யாவுள என வினா எழுப்பிய தமிழ்த்தென்றல் திரு.வி.க.விற்கு வழிகாட்டி. மாதர் தம்மை
இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்ற புரட்சி இயக்கத்தைத் தோற்றுவித்த
மகான்.
ஏட்டையும்
பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி
யிருந்தவர் மாய்ந்துவிட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போமென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்
என்ற சமுதாயப் புரட்சியைத் தோற்றுவித்த பெருமகன்.
மாட்டை யடித்து கசக்கித் தொழுவினில்
மாட்டும் வழக்கத்தைக் கொண்டுவந்தே
வீட்டினி லெம்மிடங் காட்ட வந்தாரதை
வெட்டி விட்டோமென்று கும்மியடி
எனக் குசுதூகலித்த கோமான்
கற்பு நிலையென்று சொல்லவந் தாரிரு
கட்சிக்குமது பொதுவில் வைப்போம்
வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்
என முரசு கொட்டிய தளபதி மகா கவி பாரதி.
மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வமென்றால்
மனையாளும் தெய்வமன்றோ ? என்று பறை சாற்றிய மறைமாமுனி..
தையலை உயர்வு செய் என்ற புதிய ஆத்திசூடி பாடிய சொல்வேந்தர்.
திருமணம் செய்து கொண்ட புருஷனுக்கு பெண் அடிமையில்லை. உயிர்த்துணை.
வாழ்க்கைக்கு ஊன்று கோல். ஜீவனிலே ஒரு பகுதி. பெண்ணைத் தாழ்வாகவும் ஆணை மேலாகவும்
கருதி நடத்தும் முறை ஏற்பட்டிருப்பது முற்றிலும் தவறு. அது துன்பங்களுக்கெல்லாம்
அஸ்திவாரம் .அநீதிகளுக்கெல்லாம் கோட்டை. கலியுகத்திற்குப் பிறப்பிடம்.
சற்று
எண்ணிப் பாருங்கள் – மகா கவியின் சொற்பிரயோகத்தை. திருமணமான பெண்ணை வாழ்க்கைத்
துணை என்றுதான் இன்றும் சொல்லுகிறார்கள். ஆனால் பாரதி “உயிர்த்துணை”
“ என்கிறார். பெண்ணினத்தைத் தாழ்த்துவது கலியுகத்திற்குப் பிறப்பிடம் என்கிறார்.
எத்தகைய புரட்சிக் கருத்துக்கள்.
மகா
கவி பாரதி இந்திய விடுதலை வேண்டி மட்டும் பாடுபட்ட புலவரல்ல. சுதந்திரம் பெற்றபின்
இந்த நாடு எப்படித் திகழ வேண்டும் என்பதற்கும் வழிகாட்டியவர் – தொலை நோக்கோடு
சிந்தித்தவர்.
அவர்
மேலும் பேசுகிறார் கேளுங்கள் :
தமிழ்நாட்டு மாதராகிய என் அன்புக்கும் வணக்கத்திற்குமுரிய சகோதரிகளே !
பெருமை வாய்ந்த தமிழ் நாகரிகத்தின் எதிர்கால வாழ்வு உங்களுடைய பயிற்சிகளையும்
முயற்சிகளையும் பொறுத்துள்ளது. பூ மண்டலத்திலே நிகர் இல்லாத அருஞ்செல்வமுடைய
சேமநிதி யொன்றுக்குக் கடவுள் உங்களைக் காவலாக நியமித்திருக்கிறார். மனித உலகமோ
இந்த நேரத்தில் பிரம்மாண்டமான சண்ட மாருதங்களைப் போன்ற மாறுதல்களாலும்
கிளர்ச்சிகளாலும் புரட்சிகளாலும் கொந்தளிப்புற்ற கடலிடைப்பட்டதொரு சிறு தோணி போல
அலைப்புண’டும் – புறளுண்டும் – மோதுண்டும் – எற்றுண்டும் – சுழன்றுண்டும்
தத்தளிக்கிறது. இந்த மகா பிரளய காலத்தில் தமிழ் நாகரிகம் சிதறிப்
போகாதிருக்கும்படி கடவுள் அருள்புரிவாராக ! அது அங்கனம் சிதறாமலிருக்கத் தகுந்த
கல்வியாலும் - கல்விப் பெருமையாலும் –
ஒழுக்க மேன்மையாலும் – விடுதலையின் சக்திகளாலும் அதைக் காப்பாற்றக் கூடிய திறமையை
உங்களுக்கு ( பெண்களுக்கு ) பரப்பிரம்மம் அருள் செய்க.!
பெண்கள்பால் மகாகவி கொண்டிருக்கும்
நம்பிக்கையைப் பாருங்கள்.
விடுதலை
பெற்ற பாரதத்தில் கல்வி எப்படி அமைய வேண்டும் என்பதில் பாரதியார் அதிக அக்கறை
காட்டினார். நாட்டின் வாழ்வுக்கும் மேன்மைக்கும் தேசியக் கல்வியே இன்றியமையாதது
என்றார். தேசியக் கல்வி என அவர் குறிப்பிடுவது தாய்மொழிக் கல்வியையே. தேசியக்
கல்வி கற்றுக் கொடுக்காத தேசத்தை தேசம் என்று சொல்லுதல் தகாது. அது மனிதப்
பிசாசுகள் கூடி வாழும் விஸ்தாரமான சுடுகாடேயாகும் என்கிறார். இக்கல்வித்
திட்டங்களைச் செயல்படுத்துவதில் பெண்கள் இடம் பெற வேண்டுமென வற்புறுத்துகிறார். “
தமிழ்நாட்டு ஸ்திரீகளையும் சேர்த்துக் கொண்டு அவர்களுடைய யோசனைகளையும் தழுவி
நடத்தாவிடின் அக்கல்வி சுதேசியம் ஆகாது. தமிழ்க்கல்விக்கும் தமிழ்க் கலைகளுக்கும்
தொழில்களுக்கும் தமிழ் ஸ்த்ரீகளே விளக்குகள் ஆவர். தமிழ்க் கோயில் – தமிழரசு –
தமிழ்க்கவிதை – தமிழ்த் தொழில் முதலியவற்றுக்கெல்லாம் துணையாகவும்
தூண்டுதல்களாகவும் நிற்பது தமிழ் மாதர் அன்றோ ? தேசியக் கல்வியின் தமிழ்நாட்’டுக்
கிளை ஒன்றைத் துவக்க வேண்டும். அதன் ஆட்சி மண்டலத்தில் பாதித் தொகைக்குக் குறையாமல்
தமிழ் ஸ்த்ரீகள் கலந்திருக்க வேண்டும். ஒரு பெரிய ஸர்வ கலா சங்கத்தின் ஆட்சி
மண்டலத்தில் கலந்து தொழில் செய்யத் தக்க கல்விப் பயிற்சியும் லௌகிக ஞானமும் உடைய
ஸ்த்ரீகள் இலர் என ஆட்சேபம் கூறுதல் பொருந்தாது. ஆட்சி மண்டலம் அமைத்து அதில்
பத்துப் பெண்களைக் கூட்டி நடத்த வேண்டிய காரியங்களைப் பச்சைத் தமிழில் அவர்களிடம்
கூறினால் அதனின்றும் அவர்கள் பயன்படத் தக்க பல யோசனைகளையும் ஆண்மக்கள்
புத்திக்குப் புலப்பட வழியில்லாத பல புது ஞானங்களையும் சமைத்துக் கொடுப்பார்கள்
என்பதில் சந்தேகமில்லை. முன்பு தமிழ்நாட்டை மங்கம்மா ஆளவில்லையா ? ஔவையார் உலக
முழுதும் கண்டு வியக்கத் தக்க நீதி நூல்கள் சமைக்கவில்லையா ? என்று வினா
தொடுக்கிறார்.
அக
வாழ்விலும் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்களையும் பாரதி குறிப்பிடத் தவறவில்லை.
காதல்....காதல்...காதல்
காதல் போயின் சாதல் சாதல்...சாதல்
என்பது அவர்தம் முழக்கம்.
நாடகத்தில் காவியத்தில் காதலென்றால்
நாட்டினர்தாம்
வியப்பெய்தி நன்றாமென்பார்
ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோரத்தே
ஊரினிலே
காதலென்றால் உறுமுகின்றார்
பாடை கட்டி அதைக் கொல்ல வழிசெய்கின்றார்
என எள்ளி நகையாடுகிறார்.
பாரினிலே காதலெனும் பயிரை மாய்க்க
மூடரெலாம் பொறாமையினால் விதிகள் செய்து
முறை தவறி இடரெய்தி கெடுகின்றாரே
என அங்கலாய்க்கிறார்.
தாம்
நடத்திய – அல்லது தொடர்பு கொண்ட இதழ்களுக்குக் கூட “ சக்ரவர்த்தினி “ – இந்தியா –
விஜயா என்றே பெயரிட்டார்.
பாஞ்சாலி சபதம் எனும் தன்னிகரற்ற தம்
காவியத்தில் பெண்ணியக்கப் பெரும் பாணனாக – புரட்சித் தளபதியாகவே விஸ்வரூபமெடுக்கிறார்.
தருமம் அழிவெய்தி சத்தியமும் பொய்யாக
பெருமைத் தவங்கள் பெயர் கெட்டு மண்ணாக
வானத்துத் தேவர் வயிற்றிலே தீப்பாய
மோன முனிவர் முறைகெட்டுத் தாமயங்க
தேவம் பொருளின்றி வெற்றுரையாகி விட
மாதேவன் யோகம் மதி மயங்கி
என்று பாடிக் கொண்டே போன பாரதி உச்சக் கட்டத்தில்
நின்று பேசுகிறார் கேளுங்கள் :
பாஞ்சாலி
என்னை முதல்வைத்து இழந்தபின் தன்னைஎன்
மன்னர் இழந்தாரா ? மாறித் தமைத் தோற்ற
பின்னர் என்னைத் தோற்றாரா ?
எத்தகைய ஆணித்தரமான வினா இது ?
இன்னும் பாருங்கள் பீமன் சினத்தை !
இது பொறுப்பதில்லை தம்பி
எரிதழல் கொண்டு வா
கதிரை வைத்து இழந்தான் – அண்ணன்
கையை எரித்திடுவோம்
என்று கொதிக்கிறார்.
அர்ச்சுணன் சீற்றமுற்று குமுறுகிறான் :
மனமாறச் சொன்னாயோ வீமா ! என்ன
வார்த்தை சொன்னாய் – எங்கு சொன்னாய்
யாவர் முன்னே
..................................................................................
தருமத்தின் வாழ்வதனைச்சூது கவ்வும்
தருமம் மறுபடியும் வெல்லும்
கட்டுண்டோம் பொறுத்திருப்போம்
காலம் மாறும்
தருமம் அப்போது வெல்லக் காண்போம்
தணுவுண்டு ! காண்டீபம் அதன் பேர்
என்று அறை கூவுகின்றான்.
எத்தகைய புரட்சி இது. சிந்தித்துப் பாருங்கள்.
தையலை உயர்வு செய் என்ற புதிய ஆத்திசூடி பாடிய
மறவன் பாரதி.
விண்ணுக்குப் பறப்பது போல் கதைகள் சொல்வீர்
விடுதலை என்பீர் கருணை வெள்ளமென்பீர்
பெண்ணுக்கு விடுதலை நீ இல்லையென்றால்
பின்னிந்த உலகினிலே வாழ்க்கை யில்லை
என்பதன்றோ பாரதி வாக்கு ?
பெண்ணுரிமை பேணுவதில் யாருடனும் அவர் சமரசம் செய்து கொண்டாரில்லை.
கரம் சந்திர மோகன தாஸ் காந்தியை மகாத்மா என
முதன் முதலாக உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் மகா கவி பாரதி. ஆனால் விதவா
விவாகத்தில் அவர் முரண்பட்ட கருத்து தெரிவித்த
போது சற்றும் தயக்கமின்றிக் கண்டிக்கவும் தவறவில்லை. ஏன் ? சுவாமி விவேகானந்தர்பால்
எல்லையற்ற மரியாதை கொண்டிருந்த போதும் இதே கருத்தோடு அவர் ஒத்துப் போகாத போது அவரை
மறுத்துப் பேசுகிறார்.
இழி
செயல் செய்வோரைக் கண்டால் உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறம் எனப் பேசுகிறார்.
சங்கராபரணத்தில் அமைந்த மகா கவியின் கடைசிப்
பாடலில்கூட
அகில
லோகமும் ஆனவளே என்
அம்மா அம்மா அம்மா
அண்டங்களை ஆட்டுகின்றாய் நீ
அம்மா அம்மா அம்மா
என்ற பாடல் பாதியிலேயே முடிந்திருக்கிறது. சுருங்கச்
சொன்னால் பெண்ணினம் பெற்ற பெரும் பேறு மகா கவி பாரதி இச்சமுதாயத்திற்குக் கிடைத்தது
எனலாம்.கன்னித் தமிழே போல் அவர்தம் புகழ் வாழ்க !