Thursday, 27 June 2013

சமர்ப்பணம்

  


காட்டைஎலாம் கடந்துவிட்டேன் நாட்டை அடைந் துனது
  கடிநகர்ப்பொன் மதிற்காட்சி கண்குளிரக் கண்டேன்
கோட்டைஎலாம் கொடிநாட்டிக் கோலமிடப் பார்த்தேன்
  கோயிலின்மேல் வாயிலிலே குறைகளெல்லாம் தவிர்த்தேன்
சேட்டைஅற்றுக் கருவிஎலாம் என்வசம்நின் றிடவே
  சித்திஎலாம் பெற்றேன்நான் திருச்சிற்றம் பலமேல்
பாட்டைஎலாம் பாடுகின்றேன் இதுதருணம் பதியே
  பலம்தரும்என் உளந்தனிலே கலந்துநிறைந் தருளே

எண்ணாத மந்திரமே எழுதாத மறையே
  ஏறாத மேனிலைநின் றிறங்காத நிறைவே
பண்ணாத பூசையிலே படியாத படிப்பே
  பாராத பார்வையிலே பதியாத பதிப்பே
நண்ணாத மனத்தகத்தே அண்ணாத நலமே
  நாடாத நாட்டகத்தே நடவாத நடப்பே
அண்ணாஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
  அடிஇணைக்கென் சொன்மாலை அணிந்துமகிழ்ந் தருளே

என்உயிரும் என்உடலும் என்பொருளும் யானே
  இசைந்துகொடுத் திடவாங்கி இட்டதன்பின் மகிழ்ந்தே
தன்உயிரும் தன்உடலும் தன்பொருளும் எனக்கே
  தந்துகலந் தெனைப் புணர்ந்த தனிப்பெருஞ் சுடரே
மன்உயிருக் குயிராகி இன்பமுமாய் நிறைந்த
  மணியேஎன் கண்மணியே வாழ்முதலே மருந்தே
மின்னியபொன் மணிமன்றில் விளங்குநடத் தரசே

  மெய்யும்அணிந் தருள்வோய்என் பொய்யும் அணிந்தருளே

Wednesday, 5 June 2013

ஆட்கொண்டருளுக

பாதி இரவி லெழுந்தருளிப்
  பாவி யேனை யெழுப்பியருட்
ஜோதி யளித்தென் னுள்ளகத்தே
  சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்
நீதி நடஞ்செய் பேரின்ப
  நிதிநான் பெற்ற நெடும்பேற்றை
ஓதி முடியா தென்போலிவ்
  வுலகம் பெறுதல் வேண்டுவனே

இருளை யேஒளி எனமதித் திருந்தேன்
  இச்சை யேபெரு விச்சைஎன் றலைந்தேன்
மருளை யேதரு மனக்குரங் கோடும்
  வனமெ லாஞ்சுழன் றினம்எனத் திரிந்தேன்
பொருளை நாடுநற் புத்திசெய் தறியேன்
  பொதுவி லேநடம் புரிகின்றாய் உன்றன்
அருளை மேவுதற் கென்செயக் கடவேன்
  அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே