“ 15.08.1947 . இந்திய நாடு வெள்ளைய
ஏகாதிபத்தியத்திலிருந்து விடுதலை பெற்ற நாள். இன்று போர் முனை மாறுகிறது – போர் முறை மாறுகிறது .போராட்டம் தொடருகிறது. நிறத்தாலும் அந்நியன் –
பிறந்த நாட்டாலும் அந்நியன் – பேசும் மொழியாலும் – பின்பற்றும் நாகரிகத்தாலும் –
மேற்கொள்ளும் பண்பாட்டாலும் அந்நியனான வெள்ளையன் அரசு வெளியேறி விட்டது. ஆனால்
அவர்கள் விதைத்த கல்வி முறை – ஆங்கில மோகம் – மேன்மை தரும் மொழி என்ற மாயை இன்னும்
மறைந்து விடவில்லை. அவைகளை எதிர்த்துப் போராடித்தான் ஆக வேண்டும். “ என நாடு
விடுதலை பெற்ற நாளில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. கூறினார். “ எங்கும் தமிழ் –
எதிலும் தமிழ் – எல்லாம் தமிழ் என்று முழங்கிய தமிழினத்தின் தன்னலமற்ற தலைவனின்
சூழுரையை இந்த நேரத்தில் குறிப்பிடுவதில் தவறில்லை என்றே கருதுகிறேன். விடுதலை
பெற்று 67 ஆண்டுகளாகியும் தமிழகத்தில் பயிற்று மொழி எது என்ற உறுதியான கொள்கை
உருவாகாமலிருப்பது வெட்கப்பட வேண்டிய – வேதனைப்பட வேண்டிய செய்தி.
அண்ணல் காந்தியடிகள் ஒரு முறை கூறினார் : “
எனக்கு ஒரு சர்வாதிகாரிக்குரிய அதிகாரம் இருக்குமென்றால் இன்றைய கல்விக்கூடங்கள்
அனைத்தையும் மூடி விடுவேன். பாடப் புத்தகங்களுக்காகக் காத்திருக்க மாட்டேன்.
எல்லாக் கல்வி நிலையங்களிலும் தாய் மொழியிலேயே கற்றுக் கொடுக்கக் கட்டளை இடுவேன்
“.
அகிம்சைவழிப் போர்
நடத்தி அஸ்தமிக்காத சூரியன் பிரிட்டிஷ்
சாம்ராஜ்யம் எனக் கொக்கரித்த வெள்ளைய ஏகாதிபத்தியத்தை விரட்டிய அண்ணல்
காந்தியடிகள் பயிற்று மொழிக் கொள்கையில் - தமக்கு ஒரு சர்வாதிகாரிக்குரிய அதிகாரம்
வேண்டுமென்கிறார்.
ஏன் வேண்டும் தாய்மொழி ?
உள்ளத்தில் உள்ளதைத் தோண்டி – கல்லி எடுப்பது
கல்வி. அது தாய்மொழி மூலமே இயலும். கற்கும் ஆளுமையை விரிக்கத் துணை நிற்பது தாய் மொழிக் கல்வியே. ஆங்கிலம்
மூலம் கற்பது என்பது கல்வியின் ஆன்மாவையே சிதைக்கும் ஒரு வன்முறை. அது ஒரு மாயை.
திட்டமிட்டு வளர்க்கப்படும் ஒரு மாயை. பரப்பப்படும் பொய்.
“ மூளை – இதயம் – கைகள் இம்மூன்றுக்கும் வேலை கொடுப்பதாக –
மூன்றையும் வளர்த்தெடுப்பதாக கல்வி இருக்க வேண்டும். தகவல்களைத் தேக்கி வைக்கும்
கிடங்காக இருத்தல் கூடாது. ஆங்கிலக் கல்வி நமது நாட்டின் ஆன்மாவையே கொள்ளை கொண்டு
போய் விடும். அயல் பாட மொழி மயக்கத்திலிருந்து கல்வி கற்ற இந்தியர்கள் எவ்வளவு
விரைவில் விடுபடுகிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அவர்களுக்கும் மக்களுக்கும்
நல்லதாகும் “ எனக் காந்தியடிகள் கூறுகிறார் ( யங் இந்தியா 05.07.1929 ) .
தாய் மொழி நாம்
பிறந்ததிலிருந்து ஐம்புலன்களும் உணரக்கூடிய – உணர்வுகளோடு ஊறிய – சிந்திக்கக்
கற்றுக் கொடுக்கும் ஆற்றலுடையது.அகத்தினுள் புதையுண்டு கிடக்கும் ஒவ்வொரு மாணவனின்
திறமைகளை வெளிக் கொண்டு வருவதே கல்வியின் நோக்கம். மொழி என்பது வெறும் தொடர்பு
சாதனம் மட்டுமல்ல. அது ஒரு தேசிய இனத்தின் அடையாளம். ஒரு இனத்தை – சமூகத்தை
வகைப்படுத்திக் காட்டும் குறியீடாக மொழி அமைகிறது. குழந்தையின் வளர்ச்சிக்குத்
தாய்ப் பால் எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் அறிவு வளர்ச்சிக்குத் தாய்
மொழி. தாய்ப் பால்
குடித்தறியாத அல்லது கொடுத்தறியாத “ அறிவாளி “ களுக்கு இது புரிவது கடினமே. அவர்கள்
கல்வி என்பது வெறும் பிழைபுக்கே என்று சொல்லி விட்டுப் போகட்டும்.
பயிற்சி மொழி பற்றி
மகா கவி பாரதி
தாய் மொழியைப் பயிற்சி மொழியாகக் கொள்ளாத
பல்கலைக் கல்வியை “ பேடிக் கல்வி “ என்கிறார் பாரதியார்.
சூதிலாத உளத்தினரான தமது தந்தை ஆங்கிலக் கல்வி
முலம் கற்க அனுப்பிய பள்ளியை “ விலங்கினம் வாழும் வெங்குகை “ என பாரதி
வருணிக்கிறார். ஆங்கிலக் கல்வி கற்கத் தந்தை அனுப்பியதால்
செலவு தந்தைக்கோர் ஆயிரம் சென்றது
தீதெனக்குப் பல்லாயிரம் சேர்ந்தன
நலமோர் எட்டுனையும் கண்டிலேன் இதை
நாற்பதாயிரம் கோயிலிற் செப்புவேன்
என அடித்துப் பேசுகிறார்.
ஆம். ஆங்கிலக் கல்வியால் எந்த நன்மையும் ஏற்படவில்லை என நாற்பதாயிரம் கோயிலிற்கு
வந்து சத்தியம் செய்வதாகக் கூறுகிறார். தம் தந்தையின் செயல் எப்படியிருந்ததாம்
தெரியுமா ? “ சிங்கக் குட்டியைப் பார்த்துப் புல்லை உண்ணுக “ என்று கூறியது
போலவும் “ ஆட்டிறைச்சி விற்பது நல்ல வருவாயுடைய தொழில் – அதனால் அந்தத் தொழிலைச்
செய் என ஒரு பார்ப்பனப் பிள்ளையிடம் “ சொல்லுவது போலவும் உள்ளதாகக் கூறுகிறார்.
“ தமிழ்நாட்டில் தேசியக் கல்வி என்பதாக ஒன்று
தொடங்கி – அதில் பாஷையைப் பிரதானமாக நாட்டாமல் – பெரும்பான்மைக் கல்வி இங்கிலீஷ்
மூலமாகவும் தமிழ் ஒருவித உப பாஷையாகவும் ஏற்படுத்தினால் அது “ தேசியம் “ என்ற
பதத்தின் பொருளுக்கு முழுவதும் விரோதமாக முடியுமென்பதில் ஐயமில்லை. தேச பாஷையே
பிரதானம் என்பது தேசியக் கல்வியின் ஆதாரக் கொள்கை. இதை மறந்து விடக் கூடாது. தேச
பாஷையை விருத்தி செய்யும் நோக்கத்துடன் தொடங்கப்படும் இந்த முயற்சிக்கு நாம் தமிழ்
நாட்டில் பரிபூரண சகாயத்தை எதிர்பார்க்க வேண்டுமானால் இந்த முயற்சிக்குத் தமிழ்
பாஷையே முதற் கருவியாக ஏற்படுத்தப்படும் என்பதைத் தம்பட்டம் அறைவிக்க வேண்டும்.
பாரதியார் கட்டுரைகள் பக்கம் 502)
ஆரம்பக் கல்வி தொடங்கிக் கல்லூரிகளில்
போதிக்கப்படும் உயர்தரக் கல்வி (விஞ்ஞான –
தொழில் நுட்பப் பாடங்கள் ) வரை எல்லாப் பாடங்களும் தமிழ் மொழி வாயிலாகவே
பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்பது பாரதியாரின் கல்விக் கொள்கை. அவர் மேலும்
கூறுகையில் “ தமிழ்நாட்டில் தேசியக் கல்வி நடைபெற வேண்டுமாயின் அதற்கு அகர முதல் ன
கரப் புள்ளி ஈறாக எல்லா வ்யவகாரங்களும் தமிழ் பாஷையில் நடத்த வேண்டும் என்பது
பொருள். நூல்களெல்லாம் தமிழ் மொழி வாயிலாகக் கற்பிக்கப்படுவது மட்டுமன்றி பலகை –
குச்சி எல்லாவற்றுக்கும் தமிழிலேயே பெயர் சொல்ல வேண்டும். “ ஸ்லேட் – பென்சில் “
என்று சொல்லக் கூடாது. ( கட்டுரை பக்கம் 540 )
தேசத்தின் வாழ்வுக்கும் மேன்மைக்கும் தேசியக் கல்வி
இன்றியமையாதது.தேசியக் கல்வி கற்றுக் கொடுக்காத தேசத்தை தேசமென்று சொல்லுதல்
தகாது. அது மனிதப் பிசாசுகள் கூடி வாழும் விஸ்தாரமான சுடுகாடேயாம்.
தமிழ்நாட்டில்
தேசியக் கல்வி கற்பிக்க வேண்டுமானால் அதற்குத் தமிழே தனிக் கருவியாக
வேண்டுமென்பதைச் சொல்லவும் வேண்டுமா ? தமிழ்நாட்டு ஸ்த்ரீகளையும் சேர்த்துக்
கொண்டு அவர்களுடைய யோசனைகளையும் தழுவி நடாத்தாவிடில் அக்கல்வி சுதேசியம் ஆக
மாட்டாது. தமிழ்க் கல்விக்கும் தமிழ்க் கலைகளுக்கும் தொழில்களுக்கும் தமிழ்
ஸ்த்ரீகள் விளக்குகள் ஆவர். தமிழ்க் கோயில் – தமிழரசு – தமிழ்க்கவிதை – தமிழ்த்
தொழில் முதலியவற்றுக் கெல்லாம் துணையாகவும் தூண்டுதலாகவும் நிற்பவர் தமிழ் மாதர்
அன்றோ ? தேசியக் கல்வியின் தமிழ்நாட்டுக் கிளையென ஒரு கிளை ஏற்பட வேண்டும். அதன்
ஆட்சி மண்டலத்தில் பாதி தொகைக்குக் குறையாமல் தமிழ் ஸ்த்ரீகள் கலந்திருக்க
வேண்டும். ஒரு பெரிய ஸர்வ கலா சங்கத்தின் ஆட்சி மண்டலத்தில் கலந்து தொழில் செய்யத்
தக்க கல்விப் பயிற்சியும் லௌகிக ஞானமும் உடைய ஸ்த்ரீகள் இப்போது தமிழ்நாட்டில்
இலர் என ஆட்சேபம் கூறுதல் பொருந்தாது. ஆட்சி மண்டலம் அமைத்து அதில் பெண்களைக்
கூட்டி நடத்த வேண்டிய காரியங்களைப் பச்சைத் தமிழில் அவர்களிடம் கூறினால்
அதனின்றும் அவர்கள் பயன்படத் தக்க பல உதவி
யோசனைகளையும் - ஆண் மக்கள் புத்திக்குப்
புலப்பட வழியில்லாத புது ஞானங்களையும் சமைத்துக் கொடுப்பர் என்பதில் சந்தேகமில்லை.
முன்பு தமிழ்நாட்டை மங்கம்மா ஆளவில்லையா ? ஔவையார் உலக முழுதும் கண்டு வியக்கத்
தக்க நீதி நூல்கள் சமைக்கவில்லையா ? ( பாரதியார் கட்டுரைகள் )
ஏன் ? ஆங்கில ஆட்சி நடந்த போதே . 1882 ஆம்
ஆண்டு அரசால் அமைக்கப்பட்ட ஹண்டர் கமிஷன் ( HUNTER COMMISSION OF 1882 ) மக்களுக்கான தொடக்கக்
கல்வி தாய் மொழி வாயிலாகவே இருக்க வேண்டுமெனப் பரிந்துரைத்தது. ஐ.நா.சபை
தாய்மொழிக் கல்வியை அங்கீகரித்தது மட்டுமல்ல அதை அடிப்படை உரிமையாகவும்
ஆக்கியிருக்கிறது.
இன்றைய
நிலை
இஸ்ரேல் 55 ஆண்டுகளுக்கு முன்னர்தான் உருவானது.
நாடு உருவானதும் அவர்கள் செய்த முதல் வேலை பிற மொழிகளிலுள்ள அறிவியல் மருத்துவம்
போன்ற அனைத்தையும் தங்கள் தாய் மொழியில் மொழி பெயர்த்து அவர்கள் மொழியில்
கொடுத்தார்கள். இன்று மிகச் சிறந்த நாடுகளுள் ஒன்றாக விளங்குவது மட்டுமன்று கடந்த
50 ஆண்டுகளில் அந்த நாட்டிலிருந்து நோபல் பரிசு பெற்றோர் மட்டும் 10 பேர் என்பது
எத்துணை பெருமைக்குரிய செய்தி .
காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட இந்தோனேஷியா
எவ்வளவு சிறப்பாக விளங்குகிறது .
வளர்ந்த
நாடுகள் என்று வருணிக்கப்படுகிற ஜெர்மணி – ரஷ்யா – பிரான்ஸ் – சீனா – ஜப்பான் –
கொரியா – இத்தாலி போன்ற நாடுகளில் ஆங்கிலமா கல்வி மொழி ? எல்லாத் துறைகளழலும் கொடி
கட்டிப் பறக்கக் காரணம் என்ன ? சிந்திக்க வேண்டாமா ?
அயல்நாட்டு வாசிகளுள் பலருக்கு – ஏன் ஆட்சி
பீடத்திலுள்ளவர்களுக்குக் கூட அவர்களது தாய் மொழி தவிர வேறு எதுவும் தெரியாது. அதை
அவர்கள் தகுதிக் குறைவாகக் கருதியதும் இல்லை. பிரான்ஸ் நாட்டில் பல நிலைகளில்
ஆங்கில மொழிப் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. கடைகள் – வணிக நிறுவனங்கள்
முதலியவற்றின் பெயர்கள் ஆங்கிலத்தில் இருத்தல் கூடாது என்பது அரசாணை.
இந்தியாவிலுள்ள பிற மாநிலங்களில் கூட இத்தகு “
கொடுமை “ நிகழக் காணோம். குஜராத்தி – மராத்தி – வங்காளி – இந்தி என அவரவர் தாய்
மொழியிலேயே கற்றுத் தரப்படுகின்றன.
நம் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். ஆங்கிலத்தை
ஒரு மொழியாகக் கற்பதை யாரும் தடை செய்யவில்லை. இன்னும் சொன்னால் ஆங்கிலம்
மட்டுமல்ல பிற உலக மொழிகளையும் கற்றுச் சிறக்க வழி செய்யலாம் விரும்புபவர் எந்த
மொழியையும் பிழையறக் கற்றுக் கொள்ளட்டும். ஆங்கிலம் மட்டுமே உலக மொழி என்ற மாயை என்றோ
தகர்த்தெறியப்பட்டு விட்டது. ஆங்கிலம் முலம் – ஆங்கிலத்தைப்
பயிற்சி மொழியாக
இருக்க வேண்டுவது அவசியமில்லை – அது இயல்பான வளர்ச்சிக்கு உதவாது என்றே
வற்புறுத்துகிறோம்.சின்னஞ் சிறு நாடு என்றழைக்கப்படுகின்ற கியூபாவில் தாய்
மொழிதான் பயிற்சி மொழி.
“ சந்திராயன் “ விண்கல விஞ்ஞானி திரு மயில்சாமி
அண்ணாதுரை தாம் அறிவியலில் சிறந்து விளங்கத் தாம் தாய் மொழி – தமிழ் மூலம் கற்றதே
காரணம் எனப் பல நிகழ்வுகளில் முழங்கக் காணலாம்.
மீண்டும் சொல்லுகிறேன். ஆங்கில மாயை – ஆங்கில
மோகம் இன்னும் விடுபடவில்லை. இதற்கென மறுபடியும் ஒரு சதந்திரப் போர் தேவையிருக்காது.
இன்றைய சந்ததிக்கு உலகைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பும் வசதியும் நிறைய
இருக்கின்றன.